நாமக்கல்
சின்ன வெங்காயம் விலை உயர்வு
|நாமக்கல்லில் வரத்து குறைவால் சின்ன வெங்காயம் விலை உயர்ந்தது. ஒரு கிலோ ரூ.70-க்கு விற்பனை ஆனது.
சின்ன வெங்காயம்
நாமக்கல்லில் உள்ள கோட்டை ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தைக்கு நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள், தங்களின் விளை நிலங்களில் விளையும் காய்கறி மற்றும் பழவகைகள் இந்த உழவர் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
இங்கு கடந்த சில தினங்களாக குறிப்பிட்ட காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது சின்ன வெங்காயமும் சேர்ந்து உள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நாமக்கல்லில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் குறைந்தபட்சமாக ரூ.30-க்கும், அதிகபட்சமாக ரூ.50-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
ஆனால் கடந்த 5-ந் தேதி தொடங்கி நேற்று வரை 3 நாட்களாக தொடர்ந்து சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக கடந்த 4-ந் தேதி வரை அதிகபட்சமாக ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ சின்ன வெங்காயம், 5-ந் தேதி ரூ.60 ஆக உயர்ந்தது. பின்னர் 6-ந் தேதி ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் குறைந்தபட்ச விலையிலும் ரூ.10 உயர்ந்து ரூ.40 ஆனது.
விலை அதிகரிப்பு
இந்த நிலையில் நேற்று மீண்டும் சின்ன வெங்காயத்தின் விலை அதிகரித்தது. ஒரு கிலோ சின்ன வெங்காயம் குறைந்தபட்சமாக ரூ.50-க்கும், அதிகபட்சமாக ரூ.70-க்கும் நாமக்கல் உழவர் சந்தையில் விற்பனை செய்யப்பட்டது.
நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சின்ன வெங்காய நடவு தொடங்கி உள்ளதாலும், சந்தைக்கு வரத்து குறைந்துள்ளதாலும் சின்ன வெங்காயத்தின் விலை அதிகரித்து வருவதாக உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர்.