அரியலூர்
ஜெயங்கொண்டம் அருகே 10 இடங்களில் எண்ணெய் கிணறு மற்றும் எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனம் முடிவு-விவசாயிகள் கடும் எதிர்ப்பு
|ஜெயங்கொண்டம் அருகே 10 இடங்களில் எண்ணெய் கிணறு மற்றும் எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் விளை நிலங்கள் பாலைவனமாக மாறும் அவலம் ஏற்படும் என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கருத்து கேட்பு கூட்டம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே குண்டவெளி, குறுங்குடி, விழப்பள்ளம், புதுக்குடி, குருவாலப்பர் கோயில், சோழங்குறிச்சி, முத்துசேர்வாமடம், கட்டாகரம் உள்ளிட்ட 10 இடங்களில் எண்ணெய் கிணறு மற்றும் எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு கடந்த ஜூன் மாதம் 15-ந் தேதி அனுமதி கோரி கடிதம் எழுதினர்.
இதையடுத்து, அப்பகுதி மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவுறுத்ததியது. இதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா ஓ.என்.ஜி.சி. அதிகாரிகளை சந்தித்து பேசிய விவகாரம் விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறிய கருத்துக்கள் விவரம் வருமாறு:-
விளை நிலங்கள் பாதிப்பு
விவசாயி வெங்கடாசலம்:- ஜெயங்கொண்டம் பகுதியில் மீத்தேன் திட்டம் செயல்படுத்தப்பட்டால் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாவார்கள். மேலும் நிலத்தடி நீர் அடி மட்டத்திற்கு சென்று விடும். விளை நிலங்கள் விவசாயம் செய்ய முடியாத சூழல் ஏற்படும். எனவே இத்திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். இதேபோல் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுத்து இந்த திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க கூடாது.
அனுமதி அளிக்க கூடாது
அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாய பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம்:- பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் தா.பழூர், திருமானூர் பகுதிகளை சேர்க்காவிட்டாலும் ஓ.என்.ஜி.சி. மற்றும் ஐட்ரோ கார்பன் ஆயில் கேஸ் எண்ணெய் எடுக்க அனுமதிக்க மாட்டோம் என தமிழக அரசு விவசாயிகளுக்கு உறுதி அளித்தது. இந்நிலையில் மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் ஓ.என்.ஜி.சி. நிறுவனங்கள் தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் ஐட்ரோ கார்பன் எடுக்க அனுமதிக்க வேண்டும் என அனுமதி கேட்டதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் மீண்டும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கவல்ல திட்டமான எண்ணெய் எடுக்கும் திட்டங்களை அரியலூர் மாவட்டத்தில் எடுக்க அனுமதி கேட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே தமிழக அரசு ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் எண்ணெய் ஐட்ரோ கார்பன் என எந்த வகையான பூமிக்கடியில் தோண்டி ராட்சத ஆழ்துளை கிணறுகள் அமைத்து எடுக்கும் திட்டத்திற்கு அனுமதி அளிக்க கூடாது.
பொன்விளையும் பூமி
சமூக ஆர்வலர் பரசுராமன்:- அரியலூர் மாவட்டத்தில் 10 இடங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி. எனப்படும் இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. பொன்விளையும் பூமியான அரியலூர் மாவட்டத்தை சீரழிக்கும் இந்த திட்டத்தை செயல்படுத்த ஓ.என்.ஜி.சி. நிறுவனம் துடிப்பது கண்டிக்கத்தக்கது. தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய காவிரி படுகையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 200-க்கும் மேற்பட்ட கிணறுகளை அமைத்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை எடுத்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக பந்தநல்லூர் திட்டப்பகுதிக்குட்பட்ட அரியலூர் மாவட்டத்தின் 10 இடங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகளை அமைக்க ஒ.என்.ஜி.சி. நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. ஒவ்வொரு எண்ணெய் கிணறும் ரூ.25 கோடி செலவில் அமைக்கப்பட இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இயற்கை வளங்கள் கொள்ளை
இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன், பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்த வேண்டும் என்று ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கேட்டுக் கொண்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து மக்களை ஏமாற்றி திட்டங்களுக்கு அனுமதி பெற்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள இயற்கை வளங்களை கொள்ளையடிக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
காவிரிப்படுகையில் ஏற்கனவே 200-க்கும் மேற்பட்ட எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பல்லாயிரம் அடி ஆழத்திற்கு துளையிட்டு எண்ணெய், எரிவாயு போன்ற விலைமதிப்பற்ற இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. இதனால் அந்தப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்திருக்கிறது. ஒரு சில இடங்களில் நிலத்தடி நீருடன் சேர்ந்து, கழிவு நீரும் கலந்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இத்தகைய சூழலில் மேலும் 10 இடங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகள் அமைக்கப்பட்டால், அதன் விளைவுகள் மிகவும் மோசமாகிவிடும்.
போராட்டம் நடத்தப்படும்
ராமநாதன்:- ஜெயங்கொண்டத்தில் எண்ணெய் கிணறு மற்றும் எரிவாயு எடுக்க அனுமதி கொடுத்தால் விவசாய நிலங்கள் பாலைவனமாக மாறும். நிலத்தடி நீர் அடிமட்டத்திற்கு சென்று தண்ணீர் பஞ்சம் ஏற்படும். எனவே இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சார்பில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த உள்ளோம். ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதிகளில் 6 இடங்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மூலம் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு விவசாயிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். தமிழகத்தில் இத்திட்டத்தை செயல்படுத்த மறுப்பு தெரிவித்து பல கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளோம். தமிழக அரசும் இந்த திட்டத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.