மதுரை
மதுரையில் பாலத்தில் இருந்து தவறி விழுந்த ஒரு வயது குழந்தை சாவு- தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபரீத விபத்து
|தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது திடீர் பிரேக் பிடித்ததில் பாலத்தில் இருந்து தவறி விழுந்த ஒரு வயது பெண் குழந்தை பரிதாபமாக இறந்தது.
தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது திடீர் பிரேக் பிடித்ததில் பாலத்தில் இருந்து தவறி விழுந்த ஒரு வயது பெண் குழந்தை பரிதாபமாக இறந்தது.
பாலத்தில் சென்ற மோட்டார் சைக்கிள்
மதுரை நகரில் இருந்து விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் தெற்கு வாசல் பகுதியில் என்.எம்.ஆர். ரெயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது.
30 ஆண்டுகள் பழமையான இந்த பாலம் சற்று குறுகலானது. அதே நேரத்தில், எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்தது.
ஜெய்ஹிந்த்புரம் சோலையழகுபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் முத்துக்கருப்பன். இவருடைய ஒரு வயது பெண் குழந்தை கவிப்பிரியா. சம்பவத்தன்று முத்துக்கருப்பன் தனது குழந்தையை மோட்டார் சைக்கிளில் முன்னால் வைத்துக்கொண்டு அந்த பாலத்தில் சென்று கொண்டிருந்தார். பாலத்தின் மையப்பகுதியை தாண்டி அவரது மோட்டார்சைக்கிள் சென்று கொண்டிருந்தது.
குழந்தை சாவு
பாலம் கிட்டத்தட்ட நிறைவு பெறும் பகுதியில் சென்றபோது, திடீரென முன்னே சென்ற வாகனத்தின் மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்துள்ளார். அப்போது அவரது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி விழுந்தது. அப்போது, பாலத்தில் இருந்து சுமார் 5 அடி பள்ளத்தில் தரைப்பகுதியில் குழந்தை போய் விழுந்தது.
இதில் குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் ஓடிவந்து குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தைக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
ஆனால் குழந்தை கவிப்பிரியா சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தாள். இந்த சம்பவம் குறித்து குழந்தையின் தாய் கார்த்திகை செல்வி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.