< Back
மாநில செய்திகள்
பூனை போக ஒரு வழி, பூனைக்குட்டி போக ஒரு வழியா? - சட்டசபையில் அண்ணாவின் உதாரணத்தை சுட்டிக்காட்டிய அமைச்சர் பொன்முடி
மாநில செய்திகள்

'பூனை போக ஒரு வழி, பூனைக்குட்டி போக ஒரு வழியா?' - சட்டசபையில் அண்ணாவின் உதாரணத்தை சுட்டிக்காட்டிய அமைச்சர் பொன்முடி

தினத்தந்தி
|
31 March 2023 10:46 PM IST

இருமொழி கொள்கைக்கு உதாரணமாக பேரறிஞர் அண்ணா கூறிய உதாரணத்தை சட்டசபையில் அமைச்சர் பொன்முடி சுட்டிக்காட்டி பேசினார்.

சென்னை,

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று உயர்கல்வித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் உயர்கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் பொன்முடி பதிலளித்துப் பேசினார்.

அப்போது அவர் இருமொழி கொள்கை குறித்து தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா கூறிய உதாரணத்தை சுட்டிக்காட்டியது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது. இது குறித்து அமைச்சர் பொன்முடி பேசியதாவது;-

"பேரறிஞர் அண்ணா இருமொழி கொள்கையைத் தீவிரமாகப் பேசினார். புதிய கல்விக் கொள்கையை ஆதரிக்கறவர்கள் இங்கு இருக்கிறார்கள். ஏன் அண்ணா மும்மொழி கொள்கையை எதிர்த்தார் என்பதை அவர்களும் தெரிந்து கொள்ளட்டும்.

அண்ணா இருமொழி இருந்தால் போதும் என்றார். ஒன்று உலக மொழி ஆங்கிலம், மற்றொன்று உள்ளூர் மொழி தமிழ். இதற்கு உதாரணமாக அண்ணா ஒரு கதையைச் சொன்னார். ஒருவர் தனது வீட்டில் பெரிய ஓட்டை ஒன்றை துளையிட்டிருந்தார். பக்கத்து வீட்டார் எதற்கு இந்த துளை? எனக் கேட்டார்.

அதற்கு அவர், 'இது பூனை செல்வதற்கான வழி' என்று சொன்னாராம். அடுத்த நாள் பக்கத்து வீட்டுக்காரர் வந்து பார்க்கும்போது பெரிய ஓட்டைக்கு அருகிலேயே சிறிய ஓட்டை துளையிடப்பட்டிருந்தது. அது எதற்காக என கேட்ட போது, 'பெரிய துளை பெரிய பூனைக்கு, சின்ன துளை பூனைக்குட்டிக்கு' என்றாராம்.

பெரிய பூனை செல்லும் பெரிய துளை வழியாக பூனைக்குட்டியால் செல்ல முடியாதா? இது அண்ணா சொன்ன உதாரணம். ஆகவே, உலக மொழி ஆங்கிலம் இருக்கும் போது, இந்தி மொழி தேவையில்லை. அதேவேளையில், மற்ற மொழிகளை கற்பிப்பதில் தமிழகத்துக்கு எந்தப் பிரச்னையும் இல்லை."

இவ்வாறு அமைச்சர் பொன்முடி பேசினார்.


மேலும் செய்திகள்