திருச்சி
ஒரு டன் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
|ஒரு டன் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மண்டல குடிமை பொருள் குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா உத்தரவின்பேரில் திருச்சி சரக துணை போலீஸ் சூப்பிரண்டு சுதர்சன் மேற்பார்வையில் திருச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான போலீசார் கல்லக்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கல்லக்குடி அருகே மால்வாய் செல்லும் சாலையில் உள்ள பழைய பயன்பாடற்ற கட்டிடத்தின் அருகே வெள்ளை நிற மூட்டைகளுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதைப்பார்த்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கல்லக்குடி மேலரசூரை சேர்ந்த கணேசன் (வயது 40) என்பதும், அவர் வைத்திருந்த 20 மூட்டைகளில் தலா 50 கிலோ வீதம் ஒரு டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 1,000 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.