< Back
மாநில செய்திகள்
காதலுக்கு ஒருத்தி...கல்யாணத்துக்கு வேறொருத்தி... - இளம்பெண் கண்ணீர் புகார்
மாநில செய்திகள்

காதலுக்கு ஒருத்தி...கல்யாணத்துக்கு வேறொருத்தி... - இளம்பெண் கண்ணீர் புகார்

தினத்தந்தி
|
17 July 2024 5:19 AM IST

காதலனை திருமணம் செய்து கொள்ளுமாறு இளம்பெண் வற்புறுத்தினாள்.

கோவை,

கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் இளம்பெண். இவர்கோவை சொக்கம்புதூரை சேர்ந்த ஒரு வாலிபரை 6 வருடமாக காதலித்து வந்துள்ளார். காதலனுடன் நெருக்கமாக பழகியதில் அவள் 3 மாத கர்ப்பமானாள். இதைதொடர்ந்து காதலனை திருமணம் செய்து கொள்ளுமாறு இளம்பெண் வற்புறுத்தினாள்.

ஆனால் காதலனின் பெற்றோர், கர்ப்பத்தை கலைத்தால் மகனை திருமணம் செய்து தருவதாக அவளிடம் கூறினர். அதனை நம்பி, அவளும் கர்ப்பத்தை கலைத்தாள். இருப்பினும் திருமணம் செய்து கொடுக்கவில்லை. இந்த நிலையில் அவளது காதலனுக்கு அவனது பெற்றோர் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைத்துவிட்டனர். காதலன்தான் கணவனாக வருவான் என நம்பி இருந்த இளம்பெண்ணின் இதயம், சுக்குநூறாக நொறுங்கியது. காதலுக்கு ஒருத்தி... கல்யாணத்துக்கு வேறொருத்தி...! என்கிற கதையாய் இந்த இளம்பெண்ணின் வாழ்க்கை அமைந்தது.

இதுகுறித்து அவள் கண்ணீர் மல்க, கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதில் அவள் கூறி இருப்பதாவது:- எனது நிலை குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. மேலும் புகார் அளித்தால் என்னையும், எனது குடும்பத்தையும் கொலை செய்து விடுவதாக காதலித்த அந்த வாலிபர் மிரட்டுகிறார். மேலும் நெருக்கமாக இருந்தபோது எடுத்த ஆபாச வீடியோக்கள், புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும் மிரட்டி வருகிறார். எனவே அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் .இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்