சென்னை புளியந்தோப்பு குடியிருப்பில் லிப்ட் அறுந்து விழுந்து ஒருவர் பலி
|சென்னை புளியந்தோப்பு அடுக்குமாடி குடியிருப்பில் லிப்ட் அறுந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
சென்னை,
சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் கூலித் தொழிலாளி கணேசன்(வயது 55). இவர் அந்த குடியிருப்பின் 10-வது மாடியில் இருந்து தரை தளத்திற்கு வருவதற்காக லிப்டை பயன்படுத்தியிருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக லிப்ட் அறுந்து விழுந்துள்ளது.
இதனால் விபத்தில் படுகாயமடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து போலீசார் விரைந்து வந்தனர். அப்போது கணேசனின் உடலை எடுத்துச் செல்ல விடாமல் குடியிருப்பு வாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புளியந்தோப்பு அடுக்குமாடி குடியிருப்பில் முறையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என அவர்கள் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உயிரிழந்த கணேசனின் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.