< Back
மாநில செய்திகள்
கிணற்றில் தவறி விழுந்து ஒருவர் சாவு
தென்காசி
மாநில செய்திகள்

கிணற்றில் தவறி விழுந்து ஒருவர் சாவு

தினத்தந்தி
|
12 May 2023 12:30 AM IST

சிவகிரியில் கிணற்றில் தவறி விழுந்து ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

சிவகிரி:

சிவகிரி அருகே உள்ள இனாம்கோவில்பட்டி நாடார் கீழத்தெருவைச் சேர்ந்த பாலையா மகன் சுடலைமுத்து (வயது 46). இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று திரும்பி வந்தார்.

இந்த நிலையில் இனாம் கோவில்பட்டிக்கு தெற்கே உள்ள கிணற்றில் குளிப்பதற்காக சென்றார். ஆனால் மாலை வரை வீடு திரும்பாததால் பெற்றோர், உறவினர்கள் கிணற்று பகுதிக்கு சென்று பார்த்தனர். கிணறு முழுவதும் தண்ணீர் இருந்ததால் வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் அப்துல் காதர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மின்மோட்டார் மூலம் கிணற்றில் இருந்து தண்ணீரை வெளியேற்றினர். அப்போது, கிணற்றில் படிக்கட்டுக்கு அடியில் சுடலைமுத்து பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து சிவகிரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீஸ் நடத்திய விசாரணையில், கிணற்றில் தவறி விழுந்து சுடலைமுத்து இறந்தது தெரியவந்தது.

மேலும் செய்திகள்