திருவாரூர்: விருந்தில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட ஒருவர் உயிரிழப்பு - 5 பேருக்கு தொடர் சிகிச்சை!
|திருவாரூர் மாவட்டத்தில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர்,
திருப்பூரில் குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவு சாப்பிட்ட 3 சிறுவர்கள் மயங்கி விழுந்து இறந்தனர். இந்த நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் அருகே உள்ள திருவாசல் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த செல்லதுரை என்பவரின் மகன் விக்னேஷ். இவருடைய மனைவி மாரியம்மாள் (வயது26). இவர் 5 மாதம் கர்ப்பமாக உள்ளார்.இவருக்கு 5-ம் மாதம் மருந்து கொடுக்கும் நிகழ்வு விக்னேஷ் வீட்டில் நேற்று முன் தினம் நடந்தது. அதன்பின் நடந்த விருந்தில்5 வகை சாதம் ஆகியவற்றுடன் பிரியாணி பரிமாறப்பட்டது.
இந்த நிலையில் இந்த விருந்தில் உணவருந்திய சிறிது நேரத்தில் 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன.
இதனையடுத்து அவர்களை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதில் 12 பேர் உடல்நலம் பெற்று வீட்டிற்கு திரும்பினர். வேலங்குடியைச் சேர்ந்த செல்வமுருகன் (24), சந்துரு (10), இளரா (62), செல்வகணபதி (25), பாலாஜி (22), ராஜமாணிக்கம் (60), கர்ப்பிணி மாரியம்மாள், 4 வயது குழந்தை ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் வேலங்குடியைச் சேர்ந்த செல்வமுருகன் (24) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது குறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.