'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்பது நடைமுறைக்கு ஒத்துவராத திட்டம் - உயர்மட்டக் குழுவிற்கு வைகோ கடிதம்
|ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதை காரணம் காட்டி ஒரு ஆட்சியைக் கலைக்க முடியாது என வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை,
'ஒரே நாடு ஒரே தேர்தல்' குறித்து ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 'ஒரே நாடு ஒரே தேர்தல்' முறையை அமல்படுத்துவது குறித்து ஆலோசனைகளை வழங்கும்படி தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் மற்றும் பொதுமக்களிடம் உயர்மட்டக் குழு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த நிலையில் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்பது நடைமுறைக்கு ஒத்துவராத திட்டம் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உயர்மட்டக் குழுவிற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது;-
"1967 வரை இந்திய மக்களவைக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில்தான் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டு வந்தது. பின்னர் மாநில அரசுகள் கலைப்பு, புதிய மாநிலங்கள் உருவாக்கம் உள்ளிட்ட காரணங்களால் தேர்தல்களின் சுழற்சியில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. இப்போது ஆந்திர பிரதேசம், சிக்கிம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டுமே சட்டமன்றத் தேர்தல் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படுகிறது.
இந்நிலையில், இப்படி ஒரு முயற்சியில் மத்திய அரசு இறங்கியிருக்கிறது. ஆளும் கட்சிகள் தேர்தல்களில் கவனம் செலுத்துவது குறைந்து, ஆட்சியிலும் நலத்திட்டங்களிலும் கவனம் செலுத்த முடியும் என்பன போன்ற வாதங்கள் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு ஆதரவாக முன்வைக்கப்படுகின்றன. இந்த வாதங்களில் நியாயம் இருந்தாலும், இதுவரை இதற்கான உறுதியான சான்றுகள் இல்லை.
உண்மையில், தேர்தல் நடத்துவதை வெறும் செலவுப் பிரச்சினையாகச் சுருக்கிவிட முடியாது. ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்படும்போது சில மாநில அரசுகளை அவற்றின் பதவிக் காலம் நிறைவடைவதற்கு முன்பே கலைக்க வேண்டிய சூழல் உருவாகும். இது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் வாதம் புறக்கணிக்கத்தக்கது அல்ல.
மேலும், இந்தியக் கூட்டாட்சி அமைப்பில் நாடாளுமன்றம், சட்டமன்றங்கள், உள்ளாட்சி அமைப்புகள் என மூன்று அடுக்கு அரசாட்சி அமைப்பு நிலவுகிறது. ஒரே நேரத்தில் இவை அனைத்துக்கும் தேர்தல் நடத்துவது இந்த அடுக்குகளுக்கு இடையிலான சமநிலையைப் பாதிக்கக்கூடும். அத்துடன் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இசைவானதாக சட்டமன்றங்களின் ஆயுள் காலம் மாற்றப்பட்டுக் கொண்டே இருக்குமா என்று மாநிலக் கட்சிகள் அஞ்சுவதிலும் நியாயம் இருக்கிறது.
அரசியலமைப்புச் சட்டத்தின்படி நாடாளுமன்ற மக்களவை மற்றும் சட்டப்பேரவையின் காலம் ஐந்து ஆண்டுகள். அதேநேரம், அமைச்சரவை முடிவு அடிப்படையிலும், அவசர பிரகடனத்தைச் சுட்டிக்காட்டி கவர்னரும் ஆட்சியைக் கலைக்கலாம். ஒரு ஆட்சி என்னென்ன காரணங்களுக்காக கலைக்கப்படலாம் என எஸ்.ஆர். பொம்மை வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தெளிவுபடுத்தியிருக்கிறது.
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதை காரணம் காட்டி ஒரு ஆட்சியைக் கலைக்க முடியாது. 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' என்பதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கலைப்பது என்பது, மக்கள் எண்ணத்துக்கு எதிரானது. இந்தத் திட்டத்துக்காக அரசைக் கலைத்தால், தேர்தலுக்காக செலவிடப்பட்ட மக்களின் வரிப்பணம் வீணாகும். 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்பது நடைமுறைக்கு ஒத்துவராத திட்டம். எனவே, இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும்."
இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.