மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மேலும் ஒரு இணையதளம் - மின்வாரியம் அறிவிப்பு
|பொதுமக்கள் சிரமத்தை கருத்தில் கொண்டு மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மேலும் ஒரு இணையதளத்தை மின்வாரியம் அறிமுகம் செய்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைத்தால்தான் மின் கட்டணத்தை செலுத்த முடியும் என்கிற குறுஞ்செய்தி பொதுமக்களின் செல்போன் எண்ணுக்கு அனுப்பப்பட்டது. அதனை தொடர்ந்து மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பணியை மேற்கொள்ள மக்கள் தங்களது பகுதியை சேர்ந்த இணையதள மையங்களையே நாடி வருகிறார்கள்.
இதற்காக, கடந்த மாதம் 28-ம் தேதி முதல் வரும் டிச.31-ம் தேதி வரை சிறப்பு முகாமை மின்வாரியம் நடத்துகிறது. தமிழகம் முழுவதும் 2,811 மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் சிறப்பு கவுன்ட்டர்கள் செயல்பட்டு வருகின்றன. இதற்காக, https://adhar.tnebltd.org/Aadhaar என்ற இணையதள முகவரி வெளியிடப்பட்டது.
இந்நிலையில், நாளுக்கு நாள் ஆதார் எண்ணை இணைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக bit.ly/linkyouraadhar என்றபுதிய இணையதளத்தை மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது.
இதில், ஆதார் அட்டை நகலைபதிவேற்ற வேண்டியது இல்லை. ஆதார் எண்ணை பதிவு செய்தால்போதும் என்று மின்வாரிய அதிகாரிகள் தற்போது தெரிவித்துள்ளனர்