திருவள்ளூர்
திருமண மண்டபத்தில் லிப்ட் அறுந்து விழுந்த விபத்தில் -மேலும் ஒருவர் பலி
|திருமண மண்டபத்தில் லிப்ட் அறுந்து விழுந்த விபத்தில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பத்தில் தனியாருக்கு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது. இங்கு கடந்த 13-ந் தே தி இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்த போது 2-வது மாடியில் உள்ள லிப்ட் அறுந்து விபத்துகுள்ளானது.
இந்த விபத்தில் கேட்டரிங் பணியாளரான காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தை சேர்ந்த 11-ம் வகுப்பு பள்ளி மாணவன் ஷீத்தல் (வயது 19) என்பவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சக கேட்டரிங் பணியாளர்களான காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த விக்னேஷ் (23), திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஜெயராமன் (23) ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்து சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த விபத்து தொடர்பாக இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் மண்டப உரிமையாளரும், முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் ஜெயகுமாரின் மகளுமான ஜெயப்பிரியா உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் மண்டப மேலாளரான கும்மிடிப்பூண்டி சாமிரெட்டிகண்டிகையை சேர்ந்த திருநாவுக்கரசு (32), பெரிய ஓபுளாபுரத்தை சேர்ந்த மேற்பார்வையாளர் வெங்கடேசன் (40) மற்றும் லிப்ட் ஆப்ரேட்டரான சென்னை புளியந்தோப்பை சேர்ந்த கக்கன் (22) ஆகிய 3 பேரை கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி விக்னேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.