< Back
மாநில செய்திகள்
ஒரகடம் அருகே டாஸ்மாக் விற்பனையாளர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

ஒரகடம் அருகே டாஸ்மாக் விற்பனையாளர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

தினத்தந்தி
|
19 Jun 2023 3:45 PM IST

ஒரகடம் அருகே டாஸ்மாக் விற்பனையாளர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கொலை

காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வாரணவாசி பகுதியை சேர்ந்தவர் துளசிதாஸ் (வயது 43). கோவிந்தவாடி அகரம் பகுதியை சேர்ந்தவர் ராம் (42). இவர்கள் இருவரும் ஒரகடம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளர்களாக வேலை செய்து வந்தனர். கடந்த 2021-ம் ஆண்டு கடையை பூட்டி விட்டு அவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளை எடுப்பதற்காக சென்றனர். அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் துளசிதாசை கூர்மையான ஆயுதத்தால் குத்தியுள்ளனர். இதை தடுக்க வந்த மற்றொரு விற்பனையாளர் ராமையும் குத்தியுள்ளனர். இதில் துளசிதாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

துக்காக்கியால் சுட்டனர்

இதுகுறித்து ஓரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். ராம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். சோதனையில் அவரது நுரையீரல் பகுதியில் துப்பாக்கி தோட்டா போன்ற வடிவில் ஒரு பொருள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ராம் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். நுரையீரலில் சிக்கியிருப்பது துப்பாக்கி தோட்டா என்பது அறுவை சிகிச்சைக்கு பின்னர் தெரியவந்தது.

இதன் மூலம் டாஸ்மாக் ஊழியரை தூப்பாக்கியால் சுட்டதும் தெரியவந்தது. வழக்கில் தொடர்புடையவர்கள் பீகார் மாநிலத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

கைது

இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் குற்றவாளிகளை பிடிக்க பிகார் மாநிலத்திற்கு சென்று அந்த மாநில போலீசார் உதவியுடன் டாஸ்மாக் ஊழியர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான பீகார் மாநிலம் கைமூர் மாவட்டம் சைன்பூர் அவங்ஹாரா கிராமத்தை சேர்ந்த உமேஷ் குமார் (வயது 25), என்பவரை கடந்த 2021-ம் ஆண்டு கைது செய்தனர்.

டாஸ்மாக் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் ஒருவரை தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடிவந்தனர். இந்த நிலையில் தேடப்பட்டு வந்தவர் பீகார் மாநிலத்தில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் பீகார் மாநிலத்துக்கு சென்று அங்கு பதுங்கி இருந்த அரவிந்த் குமாரை (வயது 28) கைது செய்தனர்.

தகராறு

போலீஸ் விசாரணையில் கடந்த 2021 -ம் ஆண்டு ஒரகடம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று உமேஷ் குமார் மது பாட்டில் வாங்கியுள்ளார். அப்போது அதிக விலை சொல்லி இருக்கிறார் துளசிதாஸ். அப்போது துளசிதாசுக்கும் உமேஷ் குமாருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் டாஸ்மாக் விற்பனையாளர்கள் உமேஷ் குமாரை தாக்கியுள்ளனர். இதில் ஆத்திரம் அடைந்த உமேஷ் குமார் பீகாருக்கு சென்று தனது நண்பரான அரவிந்த் குமாரிடம் இது குறித்து கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து உமேஷ் குமாரும், அரவிந்த் குமாரும் திட்டம் தீட்டி இந்த கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும் செய்திகள்