ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
|ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை,
தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டு கோர்ட்டு காவலில் உள்ளனர். கைதான திருவேங்கடம் என்ற ரவுடி போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டு வீழ்த்தப்பட்டார்.
மேலும் இந்த வழக்கில் பிரபல ரவுடிகள் சம்போ செந்தில், சீசிங் ராஜா ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். சம்போ செந்தில் தாய்லாந்து நாட்டுக்கு தப்பி சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியானது. தற்போது அவர் இந்தியா வந்து வடமாநிலத்தில் பதுங்கி இருப்பதாக புதிய தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. ரவுடி சீசிங் ராஜா ஆந்திராவில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் ஆற்காடு சுரேஷின் உறவினர் என கூறப்படுகிறது. 2 நாட்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கில் இதுவரை பிரதீப்புடன் சேர்த்து 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.