திருப்பத்தூர்
ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
|உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
திருப்பத்தூர்
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 6 ஊராட்சி ஒன்றியங்களில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி மற்றும் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணி திருப்பத்தூர் ஒன்றியம் கதிரிமங்கலம், கிராமத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் மாரி இளையராஜா தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வி. வடிவேல் வரவேற்றார். மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் அமர்குஷ்வாஹா தொடங்கி வைத்தார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, உதவி செயற்பொறியாளர் மகேஷ் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் மணவாளன், ஒன்றியக்குழு உறுப்பினர் லலிதா மோகன்குமார், வார்டுஉறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இறுதியில் ஊராட்சி செயலாளர் வெங்கடாஜலபதி நன்றி கூறினார்.
மாடப்பள்ளி ஊராட்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு கோமதி கார்த்திகேயன் தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர் அண்ணாமலை வரவேற்றார். கலெக்டர் அமர்குஷ்வாஹா, ஒன்றியக்குழு தலைவர் விஜியா அருணாச்சலம், துணைத் தலைவர் டி.ஆர்ஞானசேகரன் மரக்கன்றுகளை நட்டு, மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணியை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் சுபாஷ் சந்திரபோஸ், ஒன்றிய கவுன்சிலர் ரகு மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.