நெல்லையில் வெள்ளத்தின்போது பாம்பு கடித்து ஒருவர் பலி: 14 பேருக்கு சிகிச்சை
|நெல்லை மாவட்டத்தில் பாம்பு கடித்ததில் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் கடந்த 17, 18-ந் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தன. வெள்ள பாதிப்புகளை சீரமைக்கும் பணி, நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நெல்லை மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தின்போது பாம்பு கடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும், விஷப்பூச்சிகள் உள்ளிட்டவை கடித்தததில் 14 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக நெல்லை மாவட்ட அரசு மருத்துவமனை முதல்வர் ரேவதி தெரிவித்துள்ளார்.
இவர்களில், பாம்பு கடித்ததில் 9 பேரும். விஷப்பூச்சிகள் கடித்ததில் 5 பேர் என மொத்தம் 14 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில், வெள்ளம் ஆங்காங்கே வடிந்து வருவதால் வீடுகளில் பாம்புகள், பூச்சிகள், விஷ உயிரினங்கள் ஏதும் பதுங்கி இருக்கின்றனவா என்பதை உறுதி செய்த பின்னர் அதனை வெளியேற்றி விட்டு வீடுகளுக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலின் படி,
வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் பாம்புகள், பூச்சிகள், விஷ உயிரினங்கள் பதுங்கி இருக்கின்றன. வெள்ளம் வடிந்த வீடுகளுக்கு செல்லும் மக்கள் வீடுகளை சுத்தம் செய்யும் முன்பு உள்ளே உள்ள விஷ உயிரினங்கள் குறித்து உறுதி செய்து கொள்ள வேண்டும். பாம்புகள் இருந்தால் அவற்றை வெளியேற்றிய பின்பே சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட வேண்டும். அதுமட்டுமின்றி பாம்புகளை வெளியேற்ற நீண்ட கம்புகளை பயன்படுத்த வேண்டும். கொடூர விஷமுள்ள பாம்புகள் இருந்தால் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்து அவர்கள் உதவியுடன் வெளியேற்ற வேண்டும்என தெரிவிக்கப்பட்டுள்ளது.