நாமக்கல்
வேலகவுண்டம்பட்டி அருகே வாகனம் மோதி கூலித்தொழிலாளி பலி
|வேலகவுண்டம்பட்டி அருகே வாகனம் மோதி கூலித்தொழிலாளி பலி
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி அரகர தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 33). ரிக் வண்டி வைத்து தொழில் செய்து வருகிறார். இந்த ரிக் ்வண்டியில் சங்கர் (37) என்பவர் பல ஆண்டுகளாக தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சங்கரை பற்றி சரவணன் விசாரித்தபோது அவருக்கு தாய், தந்தை மற்றும் உறவினர்கள் என யாரும் இல்லாததும் அவர் அனாதையாக இருப்பதும் தெரியவந்தது.
இதற்கிடையே சங்கர் வெளியில் சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் பரமத்தி வேலூர் சாலையில் துத்திப்பாளையம் பிரிவு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சங்கர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சங்கர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து சரவணன் வேலகவுண்டம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.