நாமக்கல்
'ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை' சாத்தியமா?
|பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்து இருக்கும் ‘ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை' என்ற யோசனை சாத்தியப்படுமா? என்பது குறித்து ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகள், பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஒரே போலீஸ் சீருடை
மத்திய அரசு 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு அமல்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, 'ஒரே நாடு ஒரே தேர்தல்', ஒரே நாடு ஒரே மொழி', 'ஒரே நாடு ஒரே வரி', 'ஒரே நாடு ஒரே நுழைவுத்தேர்வு' என்ற வரிசையில் இப்போது 'ஒரே நாடு ஒரே காவல்துறை சீருடை' என்ற கோஷத்தை மத்திய அரசு முன் வைத்துள்ளது.
சில தினங்களுக்கு முன்பு நடந்த மாநில உள்துறை மந்திரிகளின் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, "நாடு முழுவதும் போலீசாருக்கு ஒரே சீருடை வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும். இது சட்ட அமலாக்க பிரிவினருக்கு ஒரு பொதுவான அடையாளத்தை அளிக்கும். இதன்மூலம் காவல்துறை பணியாளர்களை எளிதில் அடையாளம் காண முடியும். 'ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை' என்பதை உங்கள் கவனத்துக்கு ஒரு சிந்தனையாக முன்வைக்கிறேன்" என்றார்.
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
பிரதமரின் இந்த யோசனைக்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மத்திய அரசு தனது அதிகாரத்தை ஒரு குடைக்குள் கொண்டுவந்து, மாநிலங்களின் அதிகாரத்தை பறிக்க நினைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இந்தியாவில் காவல் துறை என்ற அமைப்பு 1861-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்டது. இந்திய காவல் பணி (ஐ.பி.எஸ்.) அதிகாரிகள் அணியவேண்டிய சீருடை தொடர்பாக மத்திய அரசு விதிகளை உருவாக்கியுள்ளது.
அதே நேரத்தில், இந்திய காவல் பணியை சாராத போலீசாரின் சீருடைகளை அந்தந்த மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தங்களுக்கு தகுந்தாற்போல வடிவமைத்துக்கொள்கின்றன.
நாடு சுதந்திரம் அடைந்த பின்னரும் தமிழகத்தில், போலீசாரின் சீருடைகளில் மாற்றம் கொண்டுவரப்படவில்லை. ஏட்டுகள், தலைமை ஏட்டுகள், சப்-இன்ஸ்பெக்டர்கள் வரை அரைக்கால்சட்டை மற்றும் நீளமான தொப்பி அணிந்து பணியாற்றி வந்தனர். 1973-ம் ஆண்டு தமிழகத்தில் போலீசாரின் சீருடையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.
வேறுபாடு
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு போலீசார் காக்கி சீருடையும், போக்குவரத்து போலீசார் வெள்ளை நிற சட்டையும், காக்கி 'பேண்ட்'டும் அணிந்து பணியாற்றி வருகின்றனர். மேற்கு வங்காளத்தில் போலீசார் வெள்ளை நிற சீருடையிலும், புதுச்சேரியில் காக்கி சீருடையுடன் சிவப்பு நிற தொப்பியும் அணிகிறார்கள். இதேபோல டெல்லி, உத்தரபிரதேசம், கர்நாடகா, மராட்டியம், ஜம்மு-காஷ்மீர் என ஒவ்வொரு மாநிலங்களிலும் போலீஸ் சீருடைகளில் வேறுபாடுகள் இருக்கின்றன.
மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் அந்தந்த மாநிலங்களில் நிலவும் தட்பவெப்பநிலை, கலாசாரம், மாநில கொள்கை உள்ளிட்ட பல்வேறு சூழலுக்கு ஏற்ப போலீசாரின் சீருடைகளில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன.
இந்தநிலையில், மத்திய அரசு இப்போது முன்வைத்துள்ள 'ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை' என்ற யோசனை சாத்தியமா? என்பது குறித்து தமிழகத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற மூத்த போலீஸ் அதிகாரிகளும், பொதுமக்களும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
அதன் விவரம் வருமாறு:-
சாத்தியம் இல்லை
ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி. மு.ரவி:- மாநிலங்களுக்கு இடையே ஒரே மாதிரியான காக்கி சீருடை இருந்தாலும், நிற வேறுபாடு இருக்கிறது. அந்தந்த மாநிலங்களில் நிலவும் தட்பவெப்ப சூழலுக்கு ஏற்பதான் சீருடைகளை முடிவு செய்ய வேண்டும். தமிழகத்தை பொறுத்தமட்டில் வெயில் அதிகமாக இருக்கும். அதற்கு ஏற்றவாறு நமது சீருடை வடிவமைப்பு செய்யப்பட்டு இருக்கிறது. மலைப்பிரதேசமான ஊட்டியில் உள்ள நமது போலீசாருக்கு சீருடையில் மாற்றம் இருக்கிறது. நுண்ணறிவு பிரிவு, பொருளாதார குற்றப்பிரிவு உள்பட 3-ல் ஒரு பங்கு போலீசாருக்கு சீருடையே கிடையாது. ஒரே மாநிலத்தில் உள்ள போலீசார் இடையே சீருடையில் இத்தனை மாற்றம் இருக்கிறது. அப்படி இருக்கும்போது, அகில இந்திய அளவில் போலீசாருக்கு ஒரே சீருடை என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது. வேற்றுமையில் ஒற்றுமைதான் நம்முடைய பலம். அதன்படி, மாநிலங்களில் நிலவும் தட்பவெப்ப சூழலுக்கு ஏற்ப சீருடைகள் இருக்க வேண்டும்.
நடைமுறைக்கு பொருந்தாது
ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி. திலகவதி:- ஒரே நாடு ஒரே சீருடை என்பது சாத்தியப்படாத ஒன்று. ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்களின் தனித்தன்மையை காட்டுவதற்காக, போலீசாரின் சீருடையில் சிறிய மாற்றங்கள் செய்திருக்கிறார்கள். எல்லா மாநிலங்களும் ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடையை ஏற்றுக்கொள்ளாது. தமிழகத்தை எடுத்துக்கொண்டால், போக்குவரத்து போலீசார், இரவில் வாகன ஓட்டிகளுக்கு தெரியவேண்டும் என்பது உள்பட பாதுகாப்பு கருதி வெள்ளை நிற சீருடை அணிந்திருக்கிறார்கள். கமாண்டோ படைகள் வேறு சீருடையில் இருப்பார்கள். மாநில போலீசின் படைபிரிவுகளிலேயே வேறு வேறு சீருடைகள் இருக்கிறது.
இதேபோல மத்திய அரசு போலீஸ் பிரிவுகளிலும் ஒரே மாதிரியான சீருடை இல்லை. அதனால் மாநிலங்கள் ஒரே போலீஸ் சீருடை என்பதை ஏற்றுக்கொள்வது கடினம். அதனால் இது நடைமுறைக்கு பொருந்தாது என்று கருதுகிறேன்.
ஏற்றுக்கொள்ள முடியாது
ஓய்வுபெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு 'காக்கிப்பூ' விஜயராகவன்:-
காவல்துறையில் சீருடை அறிமுகப்படுத்தப்பட்டதன் முதல் நோக்கமே கட்டுப்பாடு தான். அடுத்து எத்தகைய கூட்டத்திலும், எந்த பதற்றமான சூழ்நிலையிலும் எளிதில் அடையாளம் கண்டு மக்கள் தங்கள் பிரச்சினையை தீர்த்து கொள்வதற்கான ஒரு எளிதான ஏற்பாடாகவும் இந்த சீருடை உள்ளது.
இந்த துறையில் கடை நிலையில் பணிபுரியும் இரண்டாம் நிலை காவலர் முதல் மாநிலத்தின் உச்சகட்ட பொறுப்பில் இருக்கும் அனைவருக்கும் வேறுபாடு இல்லாத தோற்றம் தருவது இந்த காக்கி தான். இது வட மாநிலங்களில் நிலவும் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப கம்பிளியில் சிறிது மாற்றம் செய்து வழங்கப்படுகிறது.
அதனால் தமிழகத்தில் நிலவும் தட்பவெப்ப நிலைக்கு இந்த காக்கி சீருடையே இதுவரை நிரந்தரமான சீருடையாக இருந்து உள்ளது. இதில் மாற்றம் கொண்டு வந்தால், மக்கள் மத்தியில் சில காலங்களுக்கு நிச்சயம் குழப்பம் ஏற்படும். மக்கள் காவல்துறையினரை ஒரு வினோதமாக பார்க்கும் சூழ்நிலை ஏற்படும். எனவே தற்போது உள்ள சீருடையில் மாற்றம் செய்ய தேவையில்லை.
ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னத்துரை:-
தற்போது பண்பாளர் முதல் பகட்டுக்காரன் வரை காக்கி உடை அணிகிறான். இதனால் உண்மையான போலீஸ் யார் என்று தெரிவது இல்லை. எனவே காக்கி நிற சீருடையை வேறு யாரும் அணிய அனுமதிக்க கூடாது. இல்லை எனில் தமிழகத்தில் போலீசுக்கு என்று தனியாக ஒரு நிறத்தில் சீருடை கொடுக்க வேண்டும்.
இந்தியா முழுவதும் போலீசுக்கு ஒரே சீருடை என்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. முதலில் இந்தியா முழுவதும் போலீசாருக்கு ஒரே சம்பளம் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நமது கலாசாரம், உணவு பழக்கவழக்கம் எப்போதும் மாற கூடாது. ஒரே நாடு ஒரே சீருடை என்கிற முடிவு சரியானது இல்லை.
போலீசாருக்கு ஒரு அடையாளம்
மோகனூரை சேர்ந்த வக்கீல் தங்கமுத்து:-
நமது நாட்டு ராணுவத்தை எடுத்து கொண்டால், பல மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் சேருகிறார்கள். அவர்களுக்கு இந்த மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் என்று, தனியாக சீருடை வழங்குவது இல்லை. அதேபோல் நாடு முழுவதும் போலீசாருக்கு ஒரே சீருடை வழங்கினால், அவர்களுக்கு ஒரு கவுரவம் கிடைக்கும்.
தற்போது நாடு முழுவதும் வக்கீல்களுக்கு ஒரே சீருடை இருக்கிறது. இதேபோன்று போலீசாருக்கும் ஒரே சீருடை இருந்தால் நன்றாக தான் இருக்கும். வெளிநாடுகளில் பல்வேறு மாகாணங்கள் இருந்தாலும், ஒரே சீருடையில் தான் போலீசார் கம்பீரமாக காட்சி அளிக்கிறார்கள். அதுபோல நமது நாட்டிலும் போலீசாருக்கு ஒரே சீருடை வழங்கினால், இந்த மாநில போலீசார் என்று இல்லாமல், இந்திய போலீஸ் என்கிற பெருமை உலக அளவில் சென்றடையும்.
வெண்ணந்தூரை சேர்ந்த சிங்காரம்:-
ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை என்கிற மத்திய அரசின் கொள்கையானது நமது பாரத தேசத்துக்கு ஏற்புடையது அல்ல. நம் நாடு வெள்ளைய ஏகாதிபத்திய அரசிடம் அடிமைப்பட்டு, இருந்த நிலையில் தேச தலைவர்கள் அரும்பாடுபட்டு நாட்டை மீட்டனர். விடுதலை போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு மதங்கள், சாதி மற்றும் மொழி பேசும் நபர்கள்.
தற்போது வரை நம்நாடு மதச்சார்பற்ற கொள்கை கோட்பாடு கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் சீருடை ஒன்று அல்லது 2, 3 நிறங்களில் உருவாக்கப்பட்டால், அதில் சாதி, மதம், இனம், மொழி என்கிற பாகுபாடு ஏற்பட்டு, பிரச்சினை உருவாகலாம். சீனா போன்ற நாடுகளுக்கு வேண்டுமானால் ஒரே நாடு, ஒரே சீருடை என்பது ஏற்புடையதாகும். ஆனால் நமது நாட்டிற்கு ஏற்புடையது இல்லை.
கந்தம்பாளையத்தை சேர்ந்த நிகாரா சுல்தானா:-
இந்திய காவல்துறையை எடுத்து கொண்டால் முதலில், போலீசாரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அதுவே அத்தியாவசிய தேவையாகும். அவ்வாறு செய்தால் குற்றங்களின் எண்ணிக்கை குறையும். மேலும் போலீசார் சுதந்திரமாக பணியாற்றும் சூழலை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் தான் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்.
போலீசாருக்கு நாடு முழுவதும் ஒரே சீருடை வந்தால், உலக அரங்கில் இந்திய போலீசாருக்கு ஒரு அடையாளம் கிடைக்கும் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.