விகிதாசார தேர்தல் முறையுடனான 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மாற்றம் வேண்டும் - டாக்டர் கிருஷ்ணசாமி
|விகிதாச்சார தேர்தல் முறை அமல்படுத்தப்பட்டால், தேர்தலில் பங்கு பெறக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளுமே தங்களுடைய வாக்கு விகிதாச்சாரத்திற்கு ஏற்ப பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து அனுப்ப முடியும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி அறிக்கையில் கூறியுள்ளார்.
சென்னை,
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசால் அமைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு 'ஒரே நாடு ஒரே தேர்தலை' ஆதரித்து ஜனாதிபதியிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்து உள்ளது. 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்பது வரவேற்கத் தகுந்த ஒன்றாகும். நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி என்று தனித்தனியே தேர்தல் நடத்துவதால் கால விரயமும், பெருத்த பொருள் செலவும் ஏற்படுவதுடன் தேர்தல் விதிமுறைகள் அடிக்கடி அமலாவதால் அரசுத் திட்டங்கள் நிறைவேறுவதில் தேக்கமும் ஏற்படுகிறது.
முக்கியமான தேர்தல் சீர்திருத்தங்களையும் இத்துடன் மத்திய அரசு அமலாக்குமேயானால், இப்பொழுது, இதை "ஒரே நாடு ஒரே தேர்தல்" முறையை ஏற்க மறுக்கும் அரசியல் கட்சிகள் கூட ஏற்க வாய்ப்பிருக்கும் என்று கருதுகிறேன்.ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை இருக்கக்கூடிய தேர்தல் முறையை நான்காண்டுக்கு ஒரு முறை என மாற்றப்பட வேண்டும். விகிதாச்சார தேர்தல் முறை அமல்படுத்தப்பட்டால், தேர்தலில் பங்கு பெறக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளுமே தங்களுடைய வாக்கு விகிதாச்சாரத்திற்கு ஏற்ப பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து அனுப்ப முடியும். எனவே, பரவிக்கிடக்கும் அனைத்து தரப்பினரும் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க முடியும்.
எனவே, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் உள்ளாட்சிகளுக்கான தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது தான் இந்தியாவை வேகமான வளர்ச்சி பாதைக்கு இட்டுச் செல்லும். அதே நேரத்தில், மத்திய அரசு 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற உன்னத லட்சியத்தை அமலாக்குகின்றபோது, விகிதாசார தேர்தல் முறையுடனான தேர்தல் மாற்றம் வேண்டும் என்பதே புதிய தமிழகம் கட்சியின் நிலைப்பாடு ஆகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.