< Back
மாநில செய்திகள்
ஓணம் விடுமுறை: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

ஓணம் விடுமுறை: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தினத்தந்தி
|
10 Sept 2022 3:26 PM IST

ஓணப்பண்டிகை விடுமுறையையொட்டி இன்று கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

கன்னியாகுமரி,

உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

ஓணப்பண்டிகை விடுமுறையையொட்டி இன்று கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர். சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். அதன்பிறகு அவர்கள் கடலில் ஆனந்த குளியல் போட்டனர்.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடா ஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆனால் கடல் நீர்மட்டம் தாழ்வு காரணமாக காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை.

இதனால் அங்கு பல மணி நேரமாக காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.பின்னர் காலை10 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து10மணிக்கு பிறகுதான் படகு போக்குவரத்து தொடங்கியது. அதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர்மண்டபத்தை மட்டும் பார்வையிட்டுவந்தனர்.

இன்று காலை வழக்கத்தை விட அதிக அளவு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்வையிட்டு வந்தனர். ஆனால் திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசும் பணி நடைபெற்று வருவதால் அங்கு படகு போக்குவரத்து நடக்கவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையை படகில் நேரில் சென்று பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். செல்போன் மூலம் திருவள்ளுவர் சிலையை படம் எடுத்து சென்றனர்.

மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, வட்டக்கோட்டை பீச், கோவளம் பீச், சொத்தவிளை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்கள் களை கட்டியது. இந்த சுற்றுலாதலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்புபணியில் ஈடுபட்டு வந்தனர்.

மேலும் செய்திகள்