திருநெல்வேலி
கல்லூரி, பள்ளிகளில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
|நெல்லை மாவட்டத்தில் கல்லூரி, பள்ளிகளில் ஓணம் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.
வள்ளியூர் பெட் பொறியியல் கல்லூரியில் நேற்று ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி பல்வேறு துறை மாணவர்கள் அத்தப்பூ கோலம் போட்டு நடனமாடினர். அனைத்து மாணவ-மாணவிகளும், பேராசிரியர்களும் கேரள பாரம்பரிய உடை அணிந்திருந்தனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. விழாவில் கல்லூரி முதல்வர் மதன்குமார், பெட் குழுமத்தின் அறங்காவலர் சாகுல்ஹமீது, செயலாளர் காஜா முகைதீன், பொருளாளர் ஜமாலுதீன் ஆகியோர் கலந்துகொண்டனர். ஓணம் பண்டிகையை முன்னிட்டு நவ்வலடி தட்சணமாற நாடார் சங்க சிவந்தி ஆதித்தனார் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் அத்தப்பூ கோலமிட்டு கொண்டாடினர்.
முக்கூடல் பூ விஜேஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி மலர் கண்காட்சியும் நடைபெற்றது. பல வண்ண மலர்களால் கோலமிட்டும், அலங்கரித்தும் ஓணத்தை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கொண்டாடினர். விழாவில் பள்ளியின் தலைவர் பூமி பாலகன், தாளாளர் விஜயகுமாரி, பொருளாளர் ரமேஷ் ராம், செயலாளர் சிவசங்கரி, தலைமை ஆசிரியை ஜீவா ஆகியோர் கலந்துகொண்டனர்.
விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள அடையகருங்குளம் அன்னை ஜோதி சிறப்பு பள்ளியில் ஓணம் பண்டிகையை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து அத்தப்பூ கோலமிட்டு கொண்டாடினர். பின்னர் அனைவருக்கும் பள்ளியின் செயலாளர் செல்வக்குமார், நிர்வாகி ஜெயபிரகாஷ் ஆகியோர் நன்றி கூறினர்.