< Back
மாநில செய்திகள்
போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்த அன்றே வீடு புகுந்து வங்கி ஊழியர் படுகொலை
மாநில செய்திகள்

போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்த அன்றே வீடு புகுந்து வங்கி ஊழியர் படுகொலை

தினத்தந்தி
|
12 July 2023 11:04 PM GMT

நில அபகரிப்பு வழக்கில் சாட்சியம் அளிக்க இருந்த நிலையில் தனக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்த முன்னாள் வங்கி ஊழியரை, அன்றைய இரவிலேயே கும்பல் படுகொலை செய்தது.

மதுரை,

மதுரை தெற்குவாசல் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்வேல் (வயது 65), ஓய்வு பெற்ற கூட்டுறவு வங்கி ஊழியர். நேற்று முன்தினம் இரவு வீட்டில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் திடீரென வீட்டிற்குள் புகுந்து செந்தில்வேலை சரமாரியாக வெட்டியது. அவரை காப்பாற்ற முயன்ற அவரது மருமகன் மணிமாறனையும் அந்த கும்பல் வெட்டியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். மேலும் அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த செந்தில்வேல் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

நிலம் அபகரிப்பு

போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

கொலை செய்யப்பட்ட செந்தில்வேலுக்கு 2 மகளும், ஒரு மகனும் உள்ளனர். அதில் மூத்த மகள் தனது தந்தையுடனும், 2-வது மகள் சென்னையில் போலீசாகவும், மகன் சென்னையில் தனியார் நிறுவனத்திலும் வேலை பார்த்து வருகிறார்கள். செந்தில்வேலுக்கு பூர்வீக நிலம் சிவகங்கை மாவட்டம் மாரநாடு கிராமத்தில் உள்ளது. அந்த நிலத்தை அதே ஊரை சேர்ந்த குமார்(39) என்பவர் போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்ததாக கூறப்படுகிறது.

இதை அறிந்த செந்தில்வேல் சிவகங்கை நில அபகரிப்பு தடுப்பு பிரிவிலும், அங்குள்ள பத்திர பதிவு அலுவலகத்திலும் புகார் அளித்தார். அதுகுறித்து அதிகாரிகள் விசாரித்து அந்த பத்திரபதிவை ரத்து செய்தனர். இதில் ஆத்திரம் அடைந்த குமார் கடந்த ஆண்டு, சொந்த ஊர் பகுதியில் செந்தில்வேலை கொலை செய்ய முயன்றார். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்தனர்

இந்த வழக்கு தொடர்பாக 12-ந் தேதி (அதாவது நேற்று) கோர்ட்டில் செந்தில்வேல் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

கோர்ட்டுக்கு வந்து சாட்சியம் அளித்தால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும், தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் நேற்று முன்தினம் செந்தில்வேல் மானாமதுரை துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையில் செந்தில்வேல் கோர்ட்டில் சாட்சியம் அளித்தால் கொலைமுயற்சி வழக்கில் தனக்கு தண்டனை கிடைத்து விடும் என்று குமார் எண்ணினார். இதுகுறித்து தனது கூட்டாளிகளிடம் தெரிவித்து அவர்களுடன் மோட்டார் சைக்கிளில் மதுரை வந்துள்ளார். ஒருவர் அவரது வீட்டின்கீழே காவலுக்கு நிற்க 3 பேர் வீடு புகுந்து செந்தில்வேலை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

4 பேர் கைது

இதற்கிடையில் தனிப்படை போலீசார் சிவகங்கை மாவட்டத்தில் பதுங்கியிருந்த குமார், அவரது தம்பி இளையராஜா, சதீஸ்குமார் மற்றும் முத்துகுமார் (30) ஆகியோரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

மேலும் செய்திகள்