தேனி
கம்பத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
|கம்பத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்
கம்பம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் மானாவாரி நிலங்கள் உள்ளன. இங்கு சோளம், மொச்சை, நிலக்கடலை, கேழ்வரகு, கம்பு, தட்டைப்பயறு, பாசிப்பயறு ஆகியவற்றை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இந்த பகுதியில் நிலத்தடி நீர் ஆதாரமாக இருந்த குளங்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளன. குறிப்பாக ஆலமரத்துக்குளத்திற்கு வரும் நீரோடைகளை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் மழை காலங்களில் குளங்களில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குளத்திற்கு தண்ணீர் வரத்து இல்லாததால் நிலத்தடி நீர்மட்டமும் உயரவில்லை. இதனால் 1,000 அடிக்கு மேல் ஆழ்துளை கிணறு அமைத்தும் தண்ணீர் கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் கம்பம் பகுதியில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.