சென்னை
சென்னை புறநகர் பகுதிகளில் தொடர்மழை புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் 90 சதவீதம் நிரம்பின
|சென்னை புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் 90 சதவீதம் நிரம்பின.
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. பூண்டி ஏரியில் மதகு, கால்வாய் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இதனை கருத்தில் கொண்டு கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தபடி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்க வேண்டாம் என்று ஏற்கனவே தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
இதனால் கிருஷ்ணா நீர் பூண்டி ஏரிக்கு அனுப்புவது நிறுத்தப்பட்டது. பூண்டி ஏரியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதையடுத்து ஏரியில் இருந்து தண்ணீர் முழுவதும் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
ஏற்கனவே புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் உள்ளது. தற்போது தொடர்ந்து பூண்டி ஏரியில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் தண்ணீர் நிரம்பி வழிகிறது. இந்த 2 ஏரிகளிலும் 90 சதவீதம் தண்ணீர் உள்ளது.
இதேபோல் கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அவ்வப்போது விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மழை நீரும் குடிநீர் ஏரிகளுக்கு அதிக அளவு வரத்தொடங்கியுள்ளது.
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3.231 டி.எம்.சி. ஆகும். இதில் 636 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு தண்ணீர் வரத்து இல்லை. புழல் மற்றும் சென்னை குடிநீர் வாரியத்துக்கு விநாடிக்கு 315 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3.300 டி.எம்.சி. ஆகும். இதில் 2.994 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது. சென்னை குடிநீர் தேவைக்காக 201 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3.645 டி.எம்.சி. ஆகும். இதில் 3.292 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் வருகிறது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 185 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
சோழவரம் ஏரியில் வெறும் 132 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 1.089 டி.எம்.சி. ஆகும். கண்ணன்கோட்டை - தேர்வாய் கண்டிகை ஏரியின் முழு கொள்ளளவான 500 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.