சிவகங்கை
விநாயகர் சதுர்த்தியையொட்டி பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் சூரசம்ஹாரம் நாளை மறுநாள் தேரோட்டம்
|திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் நடைபெற்று வரும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நேற்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் நடைபெற்று வரும் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நேற்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
விநாயகர் சதுர்த்தி
திருப்பத்தூர் அருகே உள்ளது பிள்ளையார்பட்டி. இங்கு பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. குடவரை கோவிலான இக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலும் விழாவையொட்டி தினந்தோறும் மூஷிக வாகனம், சிம்ம வாகனம், பூதவாகனம், கமல வாகனம், ரிஷப வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் கற்பகவிநாயகர் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.
சூரசம்ஹாரம்
விழாவில் 6-ம் திருநாளான நேற்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவையொட்டி நேற்று மாலை 4 மணி முதல் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. அதன் பின்னர் மாலை 5.30 மணிக்கு உற்சவர் வெள்ளி யானை வாகனத்திலும், சண்டிகேசுவரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி கோவில் கிழக்கு கோபுர வாசல் பகுதியில் தனித்தனியான சப்பரத்தில் எழுந்தருளினர். பின்னர் மூலவரிடம் இருந்து பூஜிக்கப்பட்ட தந்தத்தை கொண்டு வந்து உற்சவர் அருகே வைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மாலை 6.15 மணிக்கு சூரனை வதம் செய்ய புறப்பட்ட கற்பகவிநாயகர் கோவிலை சுற்றி வந்து தெப்பக்குளம் எதிரே அமைக்கப்பட்ட பந்தலில் காட்சியளித்து சூரனை வதம் செய்தார். முன்னதாக சூரனை வதம் செய்ய வந்த கற்பகவிநாயகரை அப்பகுதி பெண்கள் பூக்கோலமிட்டு வரவேற்றனர். சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நிறைவு பெற்ற பின்னர் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நிகழ்ச்சி காட்டப்பட்டது. 7-ம் நாளான இன்று இரவு மயில் வாகனத்திலும், 8-ம் நாளான நாளை வெள்ளி குதிரை வாகனத்திலும் கற்பகவிநாயகர் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தேரோட்டம்
விழாவில் 9-ம் திருநாளான 18-ந்தேதி மாலை தேரோட்டமும் தொடர்ந்துமாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 19-ந்தேதி 10-ம் நாளன்று காலை தங்க மூஷிக வாகனத்தில் உற்சவர் கற்பகவிநாயகர் கோவில் திருக்குளத்தில் எழுந்தருளி அங்கு தீர்த்தவாரி உற்சவம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மதியம் மூலவருக்கு மோதகம் (கொளுக்கட்டை) படையல் செய்யும் நிகழ்ச்சியும், இரவு பஞ்சமூர்த்தி சுவாமிகள் புறப்பாடு நிகழ்ச்சியுடன் சதுர்த்தி விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் கண்டவராயன்பட்டி தண்ணீர்மலை செட்டியார் மற்றும் காரைக்குடி சாமிநாதன் செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.