நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் 9 தொகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்த உள்ளோம் - அண்ணாமலை
|நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தமிழகத்தில் 9 தொகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்த இருப்பதாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.
மையக்குழு கூட்டம்
தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை கமலாலயத்தில் கட்சியின் மாநில மையக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில், தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ், மத்திய இணை மந்திரி எல்.முருகன், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., மாநில துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், கே.பி.ராமலிங்கம், கனக சபாபதி, வி.பி.துரைசாமி, மாநில அமைப்புப் பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மாநில பொதுச்செயலாளர்கள் ராம ஸ்ரீநிவாசன், கருப்பு முருகானந்தம், பொன்.பாலகணபதி, ஏ.பி.முருகானந்தம், கார்த்தியாயினி, மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம், பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரிடமும் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் நாடாளுமன்ற தேர்தலில் எப்படி போட்டியிடுவது என்பது குறித்து தனித்தனியே கேட்டறிந்துள்ளார். மேலும் கட்சியின் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்தும் விவாதித்துள்ளார். தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்தும் கேட்டு தெரிந்துள்ளார்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென் சென்னை, ஈரோடு, ராமநாதபுரம், சிவகங்கை, நீலகிரி, கோவை, வேலூர் ஆகிய 9 நாடாளுமன்ற தொகுதிகளில் தனிக் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தி உள்ளார். இந்த 9 தொகுதி பொறுப்பாளர்களையும் தனியாக அழைத்து என்னென்ன பணிகள் நடைபெற்றுள்ளன என்பது குறித்து கேட்டு அறிந்துள்ளார். மேலும், அனைத்து தொகுதிகளிலும் கள நிலவரங்களையும் கேட்டறிந்து களத்தில் எவ்வாறு செயல்படுவது என்றும் அறிவுறுத்தி உள்ளார். பா.ஜ.க.வின் எதிரி தி.மு.க.வும், காங்கிரசும்தான் என்றும் தெரிவித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
போராட்ட களம்
கூட்டத்திற்கு பின்னர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் நடைபெறும் தி.மு.க. ஆட்சி, மாநில உரிமைகளை எல்லா இடத்திலும் விட்டுக்கொடுக்க தொடங்கி இருக்கிறது. தி.மு.க. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததால், சென்னை முழுவதும் போராட்ட களமாக மாறி உள்ளது.
தமிழக சட்டசபையில் காவிரி விவகாரம் குறித்து ஒரு தலைபட்சமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கும் இதற்கும் சம்பந்தமே கிடையாது. கர்நாடக காங்கிரஸ் அரசும், தமிழக அரசும் காவிரி விவகாரத்தில் கபடி விளையாடி வருகிறது. இதனை மக்களிடையே எடுத்துச்செல்ல வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை, மீண்டும் பா.ஜ.க. ஆட்சியை கொண்டு வருவது மற்றும் தி.மு.க. செய்த தவறை மக்களிடையே கொண்டு செல்வது குறித்து ஆலோசித்தோம். நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 9 தொகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்த இருக்கிறோம். மேலும், அதைத்தொடர்ந்து 39 தொகுதிகளிலும் அதே போல் கவனம் செலுத்துவோம். நாடாளுமன்ற தேர்தல் ஜூரம் இன்னும் வரவில்லை. அகில இந்திய கட்சியாக 5 மாநில சட்டசபை தேர்தலில் கவனம் செலுத்தி வருகிறோம்.
அரசு ஊழியர்கள் நேரடியாக...
நாட்டில் எங்கேயும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் வருமான வரி, அமலாக்கத்துறை சோதனை மட்டுமின்றி, சொத்துகள் பறிமுதலும் நடந்தேறி வருகிறது. இதன் மூலம் எந்தளவுக்கு பொதுமக்களின் பணம் தனியாரின் பணமாக மாறியிருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. மணல் கடத்தலில் தமிழக அரசின் ஊழியர்களே நேரடியாக பங்கு வகிக்கின்றனர்.
விடுவிக்க எதிர்ப்பு
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் சனாதன தர்மத்தை மையமாக வைத்து தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க. தயாரா? இதில் இருந்து தப்பிக்கவே உதயநிதி ஸ்டாலின் நினைப்பார்.
தமிழக பா.ஜ.க. சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி அல்ல. அதே நேரம் கோவை குண்டுவெடிப்புக்கு காரணமானவர்களை பயங்கரவாதிகளாக பார்க்கிறேன். அவர்களது விடுதலையை வன்மையாக கண்டிக்கிறோம். எனவே, முதல்-அமைச்சர் ராஜ தர்மமாக பார்த்து முடிவு எடுப்பார் என நான் நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.