கரூர்
குடியரசு தினத்தையொட்டி போலீசார் தீவிர கண்காணிப்பு
|குடியரசு தினத்தையொட்டி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடு முழுவதும் இன்று (வியாழக்கிழமை) குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி கரூர் மாவட்ட விளையாட்டு ைமதானத்தில் இன்று காலை கலெக்டர் பிரபுசங்கர் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். இதனால் மாவட்டம் முழுவதும் முக்கியமான இடங்களில் எந்தவொரு அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க இரவு, பகலாக போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதுபோல் மாவட்டத்தில் உள்ள பஸ் நிலையங்கள், கோவில்கள், பள்ளி வாசல்கள், ஆலயங்கள் ஆகிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மாவட்டத்தில் வெடிகுண்டுகளை கண்டறியும் சிறப்பு பிரிவு போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவியின் மூலமும், மோப்ப நாய் உதவியுடனும் தீவிர சோதனை நடத்தினர்.
இதேபோல் கரூர் ரெயில் நிலையம், தண்டவாள பகுதிகளில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ரெயில் நிலையத்திற்கு பயணிகள் கொண்டு வரும் உடைமைகள் கடும் சோதனை செய்யப்பட்ட பின்னரே ரெயில் நிலையத்திற்குள் கொண்டு செல்ல போலீசார் அனுமதிக்கின்றனர்.