< Back
மாநில செய்திகள்
புரட்டாசி மகாளய அமாவாசைையயொட்டி   கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஈரோடு
மாநில செய்திகள்

புரட்டாசி மகாளய அமாவாசைையயொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு

தினத்தந்தி
|
26 Sept 2022 2:44 AM IST

புரட்டாசி அமாவாசையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

புரட்டாசி அமாவாசையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சத்தியமங்கலம்

புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சத்தியமங்கலத்தை அடுத்து பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை, அமாவாசை, பவுர்ணமி, பண்டிகை நாட்கள், விசேஷ நாட்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்வார்கள்.

நேற்று புரட்டாசி மகாளய அமாவாசை என்பதால் ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே வந்த வண்ணம் இருந்தனர். இதையொட்டி கோவில் நடை நேற்று காலை 6 மணிக்கு திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்து நின்று அம்மனை தரிசனம் செய்தனர். பின்னர் குண்டம் இருக்கும் பகுதிக்கு வந்த பக்தர்கள் அங்குள்ள சாம்பலை எடுத்து நெற்றியில் திருநீராக பூசிக்கொண்டனர். மேலும் பெண் பக்தர்கள் பலர் நேர்த்திக்கடனாக உப்பு, மிளகு ஆகியவற்றை அங்கு தூவினர். அதுமட்டுமின்றி பெண் பக்தர்கள் பலர் விளக்கு ஏற்றியும் அம்மனை மனமுருக வேண்டினர்.

இதையொட்டி கோவிலில் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அன்னதானம் நடைபெற்றது.

அந்தியூர்

இதேபோல் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் அமாவாசை தினமான நேற்று காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு பால், இளநீர், பன்னீர், தேன் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அம்மனுக்கு சந்தனகாப்பு மற்றும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்து நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.

ஊஞ்சலூர்

ஊஞ்சலூர் காவிரிக்கரையில் உள்ள நாகேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதைத்தொடர்ந்து பக்தர்கள் அங்குள்ள காவிரி ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர். இதையடுத்து நாகேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமியை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.

கொளாநல்லி பாம்பலங்கார சாமி கோவில், கொந்தளம் நாகேஸ்வரர் கோவில், பழனிக்கவுன்டன்பாளையம் பழனியாண்டவர் மலை கோவிலிலும் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பாசூர் மகா மாரியம்மன், வேங்கியம்பாளையம் மாரியம்மன் கோவிலில் அமாவாசையையொட்டி நேற்று அன்னதானம் வழங்கப்பட்டது.

சிவகிரி

சிவகிரி அருகே வேட்டுவபாளையத்தில் உள்ள புத்தூர் அம்மன் கோவிலில் அமாவாசையைெயாட்டி நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடைபெற்றது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார்.

இதேபோல் சிவகிரி அருகே உள்ள தலையநல்லூர் பொன்காளியம்மன் கோவில், சிவகிரி எல்லை மாகாளியம்மன் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

சென்னிமலை

மகாளய அமாவாசையொட்டி சென்னிமலை முருகன் கோவிலில் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு முதலில் கோமாதா பூஜை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து முருகப்பெருமானுக்கு வழக்கமாக நடைபெறும் ஆறு கால பூஜைகள் மற்றும் அமாவாசை தின சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் பஸ்கள் கூடுதல் முறை இயக்கப்பட்டது.

இதேபோல் சென்னிமலை அருகே உப்பிலிபாளையத்தில் உள்ள பொடாரம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனால் சென்னிமலை பஸ் நிலையத்தில் நேற்று பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்