விழுப்புரம்
நவராத்திரி விழாவை முன்னிட்டு கோவில்கள், வீடுகளில் கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு
|நவராத்திரி விழாவை முன்னிட்டு விழுப்புரத்தில் உள்ள கோவில்கள், வீடுகளில் கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை முடிந்து மறுநாள் நவராத்திரி விழா ஆரம்பமாகிறது. அதேபோல் இந்த ஆண்டு நவராத்திரி விழா கடந்த 26-ந் தேதி தொடங்கியது. இந்நாட்களில் கோவில்கள், வீடுகளில் 9, 7, 5 என படிகள் அமைத்து கொலு பொம்மைகளை வைத்து வழிபடுவது வழக்கம்.
இதில் முதல் 3 நாட்கள் லட்சுமிக்கும், அடுத்த 3 நாட்கள் துர்க்கையம்மனுக்கும், அதற்கடுத்த 3 நாட்கள் சரஸ்வதிக்கும் நவதானியங்களை வைத்து படையல் செய்து வழிபடுவார்கள்.
கோவில்கள், வீடுகளில் வழிபாடு
நவராத்திரி விழா தொடங்கியதையடுத்து விழுப்புரம் ஆதிபராசக்தி கோவில், நேருஜி சாலையில் உள்ள வீரவாழியம்மன் கோவில், வ.உ.சி. தெருவில் உள்ள முத்துமாரியம்மன், விழுப்புரம் பெருமாள் கோவில் தெருவில் உள்ள கோட்டை விநாயகர் கோவில், நடராஜர் தெருவில் உள்ள அங்காளம்மன், பூந்தோட்டம் முத்துமாரியம்மன், விழுப்புரம் சங்கரமடம், விழுப்புரம் குழந்தைவேல் நகரில் உள்ள சிவவிஷ்ணு கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் படிகள் அமைத்து அதில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் வீடுகளிலும் படிகள் அமைத்து அதில் கொலு பொம்மைகளை வைத்து நவதானியங்களை படையலிட்டு பெண்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். நவராத்திரி விழாவின் நிறைவு நாள் அடுத்த மாதம் (அக்டோபர்) 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.