< Back
மாநில செய்திகள்
மகாளய அமாவாசையையொட்டி பவானி கூடுதுறை- கொடுமுடியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
ஈரோடு
மாநில செய்திகள்

மகாளய அமாவாசையையொட்டி பவானி கூடுதுறை- கொடுமுடியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

தினத்தந்தி
|
14 Oct 2023 7:36 AM IST

மகாளய அமாவாசையையொட்டி பவானி கூடுதுறை- கொடுமுடியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது.

புரட்டாசி மாத மகாளய அமாவாசையையொட்டி இன்று (சனிக்கிழமை) பவானி கூடுதுறையில் ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து சாமியை தரிசனம் செய்வார்கள். அதிகமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் பவானி கூடுதுறையில் பக்தர்கள் சிரமமின்றி சாமியை தரிசனம் செய்ய தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் பவானி பகுதியில் 55-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். மேலும் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். காவிரி ஆற்றில் தண்ணீர் குறைவாக வருவதால் பக்தர்கள் புனிதநீராட தண்ணீர் தொட்டி வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இதேபோல் கொடுமுடிக்கும் திரளான பக்தர்கள் வருவார்கள் என்பதால் கொடுமுடி கோவில் நிர்வாகம் மற்றும் கொடுமுடி பேரூராட்சி சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன. கொடுமுடி பஸ் நிலையம், பைபாஸ் ரோடு, ரெயில்வே நுழைவு பாலம் ஆகிய இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு நான்கு சக்கர வாகனங்கள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டு ஆங்காங்கே நிறுத்துவதற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் பக்தர்கள் பரிகாரம் செய்வதற்கு வசதியாக கோவில் அருகே சாமியானா பந்தல்களும், சாமியை தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. அதுமட்டுமின்றி கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

மேலும் செய்திகள்