< Back
மாநில செய்திகள்
மகா சிவராத்திரியையொட்டி சிவன் கோவில்களில் விடிய, விடிய பூஜை
கரூர்
மாநில செய்திகள்

மகா சிவராத்திரியையொட்டி சிவன் கோவில்களில் விடிய, விடிய பூஜை

தினத்தந்தி
|
19 Feb 2023 12:18 AM IST

மகா சிவராத்திரியையொட்டி சிவன் கோவில்களில் விடிய, விடிய பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மகா சிவராத்திரி

கரூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் சிவராத்திரியை முன்னிட்டு நேற்று இரவு முதல் அதிகாலை வரை விடிய, விடிய சிறப்பு பூஜை நடைபெற்றது. சிவன் கோவில்களில் முதல் கால பூஜை முதல் 4 நான்கு கால பூஜைகள் வரை நடைபெற்றது.

இதில் சிவப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நேற்று இரவு 9 மணி முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து திரளான பக்தர்கள் விடிய, விடிய விழித்திருந்து சிவபெருமானை வழிபட்டு சென்றனர். சிவராத்திரியையொட்டி கோவிலில் ஆன்மிக சொற்பொழிவுகளும், பரதநாட்டியங்கள் நடைபெற்றது. இதனை பக்தர்கள் கண்டுகளித்தனர்.

100 சிவலிங்கங்கள்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கரூர் ஈஸ்வரன் கோவில் அருகே ஒரு மண்டபத்தில் 108 சிவலிங்கங்கள் தரிசனத்திற்கு வைக்கப்பட்டு இருந்தது. இதனை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டு வணங்கி சென்றனர்.

நொய்யல்

தவிட்டுப்பாளையம் அருகே நன்செய் புகழூரில் உள்ள மேகபாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்பட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை மூன்று முறை வலம் வந்தார். தொடர்ந்து இரவு 8 மணிக்கு மேல் சிவராத்திரி பூஜை தொடங்கியது. இதில் முதலில் முதல் கால பூஜை, 2-ம் கால பூஜை, 3-ம் கால பூஜை, 4-ம் கால பூஜை என காலை வரை சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வேலாயுதம்பாளையம்-தோகைமலை

வேலாயுதம்பாளையம் அருகே மண்மங்கலத்தில் உள்ள மணிகண்டேஸ்வரர் கோவிலில் காலை பிரதோஷம் மற்றும் இரவு சிவராத்தியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

தோகைமலை அருகே கழுகூரில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் காலையில் பிரதோஷம் மற்றும் இரவு சிவராத்தியை முன்னிட்டு சுவாமிக்கு விடிய, விடிய சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் மகா சிவராத்திரியையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களில் விடிய, விடிய பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்