மதுரை
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு
|மாவட்டத்தின் பல்வேறு கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருப்பரங்குன்றம்
மாவட்டத்தின் பல்வேறு கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கிருஷ்ண ஜெயந்தி
திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சுமார் 4 அடி உயரத்தில் கிருஷ்ணன் சிலை அமைந்து உள்ளது. இதனையொட்டி ஒவ்வொரு ஆண்டும் இங்கு கிருஷ்ண ஜெயந்தி விமரிசையாக கொண்டாடப்படும். அதேபோல நேற்று போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமமாலா தலைமையில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி சுவாமிக்கு சகல பூஜையும், சர்வ அலங்காரமும் நடைபெற்றது. மேலும் பழவகைகள் படைத்து மகாதீப, தூப, ஆராதனை நடந்தது. நிகழ்ச்சியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டுக்கள், போலீசார் கலந்து கொண்டனர். போலீஸ் நிலையத்திற்கு மனு கொடுக்க வந்தவர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
உறியடித்தல்
திருமங்கலம் அருகே அச்சம்பட்டி கிராமத்தில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடபட்டது. விழாைவ முன்னிட்டு குழந்தைகள், கிருஷ்ணர்-ராதை வேடமணிந்து கலந்துகொண்டனர். பின்னர் நடந்த உறியடி நிகழ்ச்சியில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி கிருஷ்ணர் கோவிலில் முன்புறம் 30 அடி உயர வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெற்றது. மேலும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு விழா குழுவினர் பரிசு வழங்கினர். ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்தனர்.
சோழவந்தான்
இதேபோல் சோழவந்தான் அருகே மேல்நாச்சிகுளம் கிராமத்தில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் மூன்று நாட்கள் விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் முக்கிய விழாவான உறியடி போட்டி மற்றும் இளவட்ட கல் தூக்கும் போட்டி நடந்தது. மேலும் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சுமார் 4 அடியில் கிருஷ்ணர் சிலை நிறுவப்பட்டு விழா நிறைவு பெற்றவுடன் சாமி சிலை குலுக்கல் முறையில் மேல்நாச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவருக்கு வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை மேல்நாச்சிகுளம் கிராமமக்கள் செய்திருந்தனர். சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்தனர்.
கொட்டாம்பட்டி அருகே உள்ள கச்சிராயன்பட்டி கல்லம்பட்டியில் கிருஷ்ணன் கோவிலின் 16-ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர்.
விழாவில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். அதனை தொடர்ந்து பாலாபிஷேகம், அலங்கார தீபாராதனை, உறியடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராமமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.