ராமநாதபுரம்
கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி கண்காட்சி திறப்புவிழா
|ராமநாதபுரத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி சிறப்பு கண்காட்சியை 4 அமைச்சர்கள் பங்கேற்று திறந்து வைத்தனர்.
கண்காட்சி
தமிழக அரசின் சார்பில் மாநில அளவில் கருணாநிதி நூற்றாண்டு விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏழை பங்காளர் கலைஞர் என்ற பெயரில் கருணாநிதி நூற்றாண்டு விழா ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி அரங்கில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், ராஜகண்ணப்பன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. அமைச்சர்கள் மெய்யநாதன், சி.வி.கணேசன், கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர், வருவாய்த்துறை ஆணையர் வெங்கடாசலம், மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவையொட்டி கருணாநிதியின் வரலாற்று சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சியை அமைச்சர்கள் திறந்து வைத்தனர். இந்த கண்காட்சி அரங்கில் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு குறித்த குறும்படம் திரையிடப்பட்டது.
கலைநிகழ்ச்சி
மேலும், மாநில அளவில் மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட ஓவிய போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த ஓவியங்கள் பொதுமக்கள் பார்வைக்காக அரங்கில் வைக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து மாணவிகளின் பரதநாட்டியம், மாணவ, மாணவிகளின் பேச்சுப்போட்டி, கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன், நவாஸ்கனி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராமநாதபுரம் காதர்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி முருகேசன், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, மாவட்ட ஊராட்சி தலைவர் திசைவீரன், துணைத்தலைவர் வேலுச்சாமி, யூனியன் தலைவர்கள் மண்டபம் சுப்புலட்சுமி ஜீவானந்தம், ராமநாதபுரம் பிரபாகரன், திருப்புல்லாணி புல்லாணி, ராமநாதபுரம் நகராட்சி தலைவர் கார்மேகம், துணைத்தலைவர் பிரவீன் தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.