< Back
மாநில செய்திகள்
ஜெயந்தியையொட்டி  கவுந்தப்பாடி காந்தி கோவிலில் சிறப்பு வழிபாடு  குமரி அனந்தன் பங்கேற்பு
ஈரோடு
மாநில செய்திகள்

ஜெயந்தியையொட்டி கவுந்தப்பாடி காந்தி கோவிலில் சிறப்பு வழிபாடு குமரி அனந்தன் பங்கேற்பு

தினத்தந்தி
|
2 Oct 2022 8:42 PM GMT

காந்தி கோவில்

கவுந்தப்பாடி அருகே உள்ள காந்தி கோவிலில் ஜெயந்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் குமரி அனந்தன் கலந்து கொண்டார்.

சிறப்பு வழிபாடு

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே செந்தாம்பாளையத்தில் காந்தி கோவில் உள்ளது. மேலும் விநாயகர் சிலை, கஸ்தூரிபாய் காந்தி சிலையும், நவக்கிரகங்களும் உள்ளன. இங்கு தினமும் 2 கால பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதில் அந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வழிபாடு செய்வார்கள். மேலும் இங்கு ஆண்டுதோறும் காந்திஜெயந்திஅன்று சிறப்பு வழிபாடு நடைபெறும்.

அதன்படி இந்த ஆண்டு காந்தி ஜெயந்தியையொட்டி பெருந்தலையூர் பவானி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வந்திருந்தனர். பின்னர் காந்திக்கும், கஸ்தூரிபாய் காந்திக்கும் பால், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர், சந்தனம் உள்பட பல்வேறு திரவியங்களால் நேற்று காலை சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. அதைத்தொடர்ந்து காந்தி, கஸ்தூரிபாய் காந்தி சிலைகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது.

அன்னதானம்

மேலும் தமிழ்நாடு காந்தி பேரவை தலைவர் குமரி அனந்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கோவில் வளாகத்தில் வைக்கப்பட்ட அகில இந்திய காந்திய இயக்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பு மகளிர் பிரிவு செயலாளர் எஸ்.கே.சித்ராவின் படத்தை திறந்து வைத்தார். பின்னர் காந்தியின் சிந்தனை என்ற தலைப்பில் பேசினார். அதைத்தொடர்ந்து கோவிலில் தரிசனம் செய்தார். இதையொட்டி அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் காந்தி கோவில் நிர்வாகி எஸ்.வி.தங்கராஜ், எஸ்.எஸ்.ஆறுமுகக் கவுண்டர், ஊர் காரியக்காரர் எஸ்.ஆர்.பழனிச்சாமி, முன்னாள் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி, கூட்டுறவு சங்க தலைவர் எஸ்.பி.மாரிமுத்து, பேரூர் தி.மு.க. செயலாளர் பழனிச்சாமி, மெத்தை செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்