தேனி
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டுஆண்டிப்பட்டி மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு:மல்லிகைப்பூ கிலோ ரூ.1,600-க்கு விற்பனை
|ஆண்டிப்பட்டி சந்தை
ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பாலக்கோம்பை, தெப்பம்பட்டி, கதிர்நரசிங்கபுரம், கொத்தப்பட்டி, ராஜதானி ஆகிய இடங்களில் பூக்கள் சாகுபடி அதிகளவில் நடைபெற்று வருகிறது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பறித்து ஆண்டிப்பட்டி பூமார்க்கெட்டில் விற்பனை செய்து வருகின்றனர். இதில் மல்லிகைப்பூக்கள் ஏலம் முறையில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் தற்போது ஆண்டிப்பட்டி பகுதியில் பூக்கள் நன்கு விளைச்சல் அடைந்து பூத்துக்குலுங்குகின்றன. இதனால் மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆவணி மாதத்தின் கடைசி முகூர்த்த நாள். நாளை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதனால் நேற்று ஆண்டிப்பட்டி சந்தையில் பூக்கள் வரத்து அதிகரித்தது. இதில் 500 கிலோவிற்கும் அதிகமான மல்லிகைப்பூ விற்பனைக்கு வந்தது.
பூக்கள் விலை உயர்வு
இதையடுத்து சந்தையில் பூக்கள் விற்பனை நடந்தது. பூக்களின் தேவை அதிகமாக இருந்ததால் மல்லிகைப்பூ, முல்லைப்பூ, பிச்சிப்பூ, செண்டுமல்லி, கோழி கொண்டை, பன்னீர் ரோஜா, சம்பங்கி உள்ளிட்ட பூக்களின் விலை படிப்படியாக அதிகரித்து விற்பனையானது. குறிப்பாக நேற்று முன்தினம் கிலோ ரூ.800-க்கு விற்ற மல்லிகைப்பூ நேற்று ரூ.1,600-க்கு விற்பனையானது.
பிச்சிப்பூ, முல்லைப்பூ கிலோ ரூ.600-க்கும் விற்பனையானது. இதேபோல் மற்ற பூக்களின் விலையும் அதிகரித்து காணப்பட்டது. முகூர்த்த சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆண்டிப்பட்டி பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.