ஈரோடு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டுஅரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பட்டாசு தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் பின்பற்ற அறிவுரை
|தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பட்டாசு தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார்.
ஆலோசனை கூட்டம்
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் மாதம் 12-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பட்டாசு தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டா் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள தயாரிப்பாளர்கள், நிரந்தர பட்டாசு உரிமதாரர்கள் மற்றும் தற்காலிக பட்டாசு உரிமதாரர்கள் ஆகியோர் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். விற்பனை வளாகம், திருமண மண்டபம், கியாஸ் குடோன், பெட்ரோல் பங்க், அதிக அழுத்தம் உள்ள மின்சார ஒயர்கள், பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடங்கள் ஆகிய பகுதிகளில் பட்டாசு கடைகள் வைக்க அனுமதி இல்லை.
புகை பிடிக்கக்கூடாது
தரைத்தளம் தவிர மாடிகளிலும், நிலவறைகளிலும் மற்றும் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் பட்டாசுகளை சேமித்து வைக்க கூடாது. பட்டாசு விற்பனை செய்ய உரிமம் பெற்ற இடத்தில் மட்டுமே பட்டாசு விற்பனை செய்ய வேண்டும். பட்டாசு கடைகள், இருப்பு அறைகளில் புகை பிடிக்கக்கூடாது என்ற அறிவிப்பு பலகை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும். அதிகளவில் வாடிக்கையாளர்களை கடைக்குள் அனுமதிக்க கூடாது.
தரமான மின் ஒயர்கள், மின்சார சாதனங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். பட்டாசு விற்பனை செய்யும் கடையின் முன் அலங்கார விளக்கு தோரணங்கள் அமைக்கக்கூடாது. எளிதில் தீப்பற்றக்கூடிய எண்ணெய் மற்றும் காகிதங்களை கடைகளிலோ, கடைகளின் அருகிலோ சேமித்து வைக்க கூடாது. பட்டாசு சேமிக்கப்பட்டுள்ள இடத்தில் சமையல் செய்யவோ, கியாஸ் சிலிண்டர் வைக்கவோ கூடாது.
அவசரகால வழி
தண்ணீர் வாளி, மணல் வாளிகள் மற்றும் அருகில் 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 தண்ணீர் தொட்டி, மணல் மூட்டைகள் மற்றும் தீயணைப்பான்கள் எந்த நேரமும் பயன்படுத்த தக்க வகையில் தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும். பட்டாசு இருப்பு அறை தனியாகவும், பட்டாசு விற்பனை செய்யும் அறை தனியாகவும் இருத்தல் வேண்டும். பட்டாசு இருப்பு அறை மற்றும் விற்பனை செய்யும் இடத்தில் பட்டாசுகளை கையாள்வதற்கு போதுமான இட வசதி இருக்க வேண்டும்.
பட்டாசு விற்பனை செய்யும் கடையில் எளிதில் வெளியேறும் வகையில் அவசரகால வழி இருக்க வேண்டும். கடைக்குள் ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த அனுமதிக்க கூடாது. வயதான நபர்கள் மற்றும் குழந்தைகளை பணியில் அமர்த்த கூடாது. எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டால் அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்தை உடனடியாக தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கூறினார்.
கூட்டத்தில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.