திருவள்ளூர்
ஊத்துக்கோட்டையில் தீபாவளியையொட்டி போலீசார் கோபுரம் அமைத்து கண்காணிப்பு
|ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில் தீபாவளியையொட்டி போலீசார் கோபுரம் அமைத்து கண்காணித்து வருகின்றனர். ஜேப்படி திருடர்களிடம் இருந்து உடைமைகளை பாதுகாக்க ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
ஊத்துக்கோட்டையில் போலீசார் கோபுரம் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஊத்துக்கோட்டை நகரம் தமிழக எல்லையில் அமைந்துள்ளது. இந்த நகரத்தை ஒட்டி ஆந்திர மாநிலம் உள்ளது. ஊத்துக்கோட்டை சுற்றுவட்டாரத்தில் இரு மாநிலங்களிலும் 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதனால் எப்போதும் நகரம் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில், தீபாவளி போன்ற பண்டிகை நெருங்கிவிட்டதால், பஜார் பகுதியில் ஜவுளி, பட்டாசு போன்ற பொருட்களை வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதும்.
இதனை பயன்படுத்தி ஜேப்படி திருடர்கள் கைவரிசை காட்டிய சம்பவங்கள் நிறைய நடைபெற்றன. இதனை தடுக்க திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கல்யாண் உத்தரவின்பேரில், ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி அறிவுறுத்தலின்படி ஊத்துக்கோட்டை அண்ணா சிலை அருகே 4 சாலைகள் சந்திப்பில் போலீசார் உயர் கோபுரம் அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் உடைமைகள் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஒலிபெருக்கி மூலமாக அறிவிப்பு செய்து வருகின்றனர்.