சென்னை
தீபாவளி பண்டிகையையொட்டி கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு தீக்காய சிகிச்சை பிரிவு வார்டு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு
|தீபாவளியையொட்டி கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தொடங்கப்பட்ட சிறப்பு தீக்காய சிகிச்சை பிரிவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
தீபாவளி பண்டிகையையொட்டி, பட்டாசுகள் மூலம் ஏற்படும் வெடி விபத்துகளை தடுக்கும் விதமாக தீயணைப்பு துறையினர் சார்பிலும், போலீசார் தரப்பிலும் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இருப்பினும் பண்டிகை நாட்களில் எதிர்பாராதவிதமாக ஏற்படும் தீ விபத்துகளுக்காக ஆஸ்பத்திரிகளில் உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில் சிறப்பு தீக்காய வார்டுகள் ஏற்படுத்தப்படும். சென்னையிலும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தீபாவளியை முன்னிட்டு ஆண்டுதோறும், சிறப்பு தீக்காய சிகிச்சை பிரிவு தொடங்கப்படுவது வழக்கம்.
அதன்படி கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில், தயார் செய்யப்பட்ட சிறப்பு தீக்காய உள்நோயாளிகள் பிரிவு வார்டை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். வார்டு தயார் நிலையில் உள்ளதா? அடிப்படை உயிர்காக்கும் முறைகள் மற்றும் விபத்தினால் காயம்பட்டோரை பாதுகாக்கும் முறைகள் குறித்த வசதிகளையும் அமைச்சர் பார்வையிட்டார்.
ஆஸ்பத்திரி வளாகத்தில் உலக விபத்து விழிப்புணர்வு தினத்துக்கான உறுதிமொழி எடுத்தக்கொண்ட பின்னர், இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-
கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் தீக்காய சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் விரைவில் குணமடைந்தும் செல்கின்றனர். இந்த ஆஸ்பத்திரியில் தான் 24 மணி நேரமும் அறுவை அரங்குகள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தீக்காயம் என்பது அஜாக்கிரதை, மன உளைச்சலால் தற்கொலை முயற்சி, திராவகம், மின்சாரம் தாக்குதல் போன்றவற்றால் மட்டுமின்றி கவனக்குறைவாக பட்டாசு வெடிப்பதாலும் ஏற்படலாம்.
தீபாவளி பட்டாசு விபத்தினால் ஏற்பட்ட தீக்காயத்துக்கு கடந்த 2019-ம் ஆண்டு 40 பேர் உள்நோயாளிகளாகவும், 15 பேர் வெளிநோயாளிகளாகவும், அதேபோல் 2020-ம் ஆண்டு 9 பேர் புறநோயாளிகளாகவும், 6 பேர் உள்நோயாளிகளாகவும், 2021-ம் ஆண்டு 22 பேர் புறநோயாளிகளாகவும், 8 பேர் உள்நோயாளிகளாக இந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
அரசு கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் ரூ.309 கோடி செலவில் 2.8 லட்சம் சதுர அடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஆஸ்பத்திரியின் இணைப்பு கட்டிடம் வருகிற 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தீயணைப்பு துறையின் மத்திய சென்னை மாவட்ட அதிகாரி சரவணன் தலைமையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளின் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. இதில் மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு, அரசு கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியின் டீன் டாக்டர் சாந்திமலர் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.