< Back
மாநில செய்திகள்
கிறிஸ்துமஸ் விழாவையொட்டிதேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
கடலூர்
மாநில செய்திகள்

கிறிஸ்துமஸ் விழாவையொட்டிதேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

தினத்தந்தி
|
26 Dec 2022 12:15 AM IST

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

விருத்தாசலம்,

ஏசு கிறிஸ்து பிறந்த நாளான டிசம்பர் 25-ந்தேதியை கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் வகையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும், வீடுகளிலும் வண்ண விளக்குகளால் அலங்கரித்து, வித, விதமான நட்சத்திரங்கள் தொங்க விடப்பட்டு இருந்தன. மேலும் ஏசு பிறப்பை சித்தரிக்கும் வகையில் கிறிஸ்துமஸ் குடில்களும் அமைக்கப்பட்டு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

அதன்படி கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி விருத்தாசலம் பாத்திமா அன்னை தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது. இந்த சிறப்பு திருப்பலி பங்குத்தந்தை பால் ராஜ்குமார் தலைமையில் நடந்தது. இதையடுத்து ஏசு பிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் தேவாலயத்தில் இருந்து குழந்தை ஏசு சொரூபம் ஊர்வலமாக எடுத்து சென்று கிறிஸ்துமஸ் குடிலில் வைத்து சிறப்பு ஆராதனை நடைபெற்றது. விழாவில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். மேலும் ஒருவருக்கு ஒருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். விழாவில் அருட்சகோதரிகள், பங்கு பேரவை, பக்த சபை இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்டவர்களை கலந்து கொண்டனர்.

பண்ருட்டி

பண்ருட்டி அருகே பணிக்கன்குப்பத்தில் உள்ள 120 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித விண்ணேற்பு அன்னை தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் பங்குத்தந்தை மரிய ஆனந்தராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. தொடர்ந்து ஏசு சொரூபம் குடிலில் வைத்து சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் பண்ருட்டி பகுதியை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

சேத்தியாத்தோப்பு

சேத்தியாத்தோப்பு வடக்கு சென்னிநத்தத்தில் உள்ள அப்போஸ்தல கிறிஸ்தவ சபையில் கிறிஸ்துமஸ் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது. மேலும் குழந்தைகளின் கலைநிகழ்ச்சியும் நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர். இதேபோல் நெல்லிக்கொல்லை, துரிஞ்சிக்கொல்லை, வளையமாதேவி, அம்மன்குப்பம், சின்ன நற்குணம் கிராமங்களில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.

காட்டுமன்னார்கோவில்

காட்டுமன்னார்கோவிலில் உள்ள புனித அமல அன்னை தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. இதில் பங்குத்தந்தை ஸ்டீபன் ராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். இதேபோல் தூய சிலுவை தேவாலயத்தில் சபை குரு தலைவர் வின்சென்ட் தலைமையில் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடந்தது.

நெய்வேலி

நெய்வேலி அருகே ரோமாபுரி அந்தோணியார் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இதில் பங்குதந்தை கிறிஸ்துராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. மேலும் குடிலில் ஏசு சொரூபம் வைக்கப்பட்டு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. விழாவில் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்