< Back
மாநில செய்திகள்
பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளப்பட்டியில் ஆட்டுச்சந்தை களை கட்டியது
கரூர்
மாநில செய்திகள்

பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளப்பட்டியில் ஆட்டுச்சந்தை களை கட்டியது

தினத்தந்தி
|
28 Jun 2023 12:33 AM IST

பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளப்பட்டியில் ஆட்டுச்சந்தை நேற்று களை கட்டியது. செம்மறி ஆடு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை விற்பனையானது

ஆட்டுச்சந்தை

அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வசித்து வருகிறார்கள். இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலும் வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் முக்கியமான பண்டிகை நாட்களில் பள்ளப்பட்டிக்கு வருவார்கள். பள்ளப்பட்டியில் ஆண்டுதோறும் பக்ரீத் பண்டியையொட்டி 2 நாட்கள் ஆட்டுச்சந்தை நடைபெறும்.

இந்தாண்டும் பள்ளப்பட்டி உழவர் சந்தை அருகே நேற்று மாலை ஆட்டுச்சந்தை தொடங்கியது. இங்கு திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை விற்பனை செய்தனர். இதேபோல் விவசாயிகள் தாங்கள் வளர்த்த ஆடுகளை நேரடியாகவே பள்ளப்பட்டி சந்தையில் வந்து விற்றனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

ரூ.30 லட்சத்துக்கு விற்பனை

பக்ரீத் பண்டிகை நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முஸ்லிம்கள் ஆட்டை குர்பானி கொடுத்து, அதன் இறைச்சியை ஏழைகளுக்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிர்ந்தளிப்பது உண்டு. இதனால் பக்ரீத் பண்டிகையையொட்டி ஆட்டுச்சந்தையில் வியாபாரம் களை கட்டும். அந்தவகையில் பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளப்பட்டியில் ஆட்டுச்சந்தை நேற்று களை கட்டியது. ஏராளமான ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள், கிடா வகை ஆடுகளை இறைச்சிக்கடை உரிமையாளர்கள், மொத்த வியாபாரிகள் போட்டிப்போட்டு வாங்கி சென்றனர். செம்மறி ஆடு ஒன்று ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை விற்பனையானது. இதில் மொத்தம் ரூ.30 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனையானது. இன்று (புதன்கிழமை) ஆடுகள் விற்பனை அதிகளவில் இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பள்ளப்பட்டி ஆட்டுச்சந்தையில் ஆடுகள் மட்டுமின்றி ஆடுகளுக்கான தீவனங்களும் விற்பனை செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்