புதுக்கோட்டை
ஆயுத பூஜையையொட்டி பூஜை பொருட்களை வாங்க கடைவீதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது
|ஆயுத பூஜையையொட்டி பூஜை பொருட்களை வாங்க கடைவீதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
ஆயுத பூஜை பண்டிகை
நவராத்திரி விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆயுத பூஜை பண்டிகை இன்று (திங்கட்கிழமை), விஜயதசமி நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகள், தொழில் நிறுவனங்கள், அலுவலகங்களில், கல்வி நிலையங்களில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்துவார்கள். இதில் வீடுகள், கல்வி நிலையங்கள், அலுவலகங்கள், தொழில் நிறுவனங்களில் சுத்தம் செய்து, வாழை குலை தோரணம் கட்டி, சாமி படங்களுக்கு மாலை அணிவித்து, பொரி, அவல், பொட்டுக்கடலை, சக்கரை பொங்கல், பழ வகைகள், தேங்காய் உடைத்து பூஜை செய்து வழிபாடு நடத்தப்படும்.
இதேபோல் வாகனங்கள் வைத்திருப்பவர்கள் தங்களது வாகனங்களையும் சுத்தம் செய்து மாலை அணிவித்து தோரணம் கட்டி பூஜை செய்வார்கள். செய்யும் தொழிலே தெய்வம் என்ற அடிப்படையில் இந்த வழிபாடு நடைபெறும்.
கூட்டம் அலைமோதியது
இந்த நிலையில் ஆயுத பூஜையையொட்டி பூஜை பொருட்களை வாங்குவதற்காக புதுக்கோட்டையில் கடை வீதிகளில் நேற்று கூட்டம் அலைமோதியது. கீழ ராஜ வீதி, தெற்கு ராஜ வீதி, சாந்தநாத சாமி கோவில் அருகே கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பூஜைக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் ஆங்காங்கே சாலையோர கடைகளும் அமைக்கப்பட்டிருந்தன.
பூசணிக்காய்களும் குவித்து வைக்கப்பட்டிருந்தன. பொதுமக்களும் தங்களுக்கும் தேவையானதை வாங்கி சென்றனர். இதேபோல் பூ மார்க்கெட்டிலும் பூ வியாபாரிகள், பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. பூக்கள் விலையும் கடுமையாக உயர்ந்திருந்தன.
வடகாடு பகுதிகளில் புதிய வீடுகள் மற்றும் கடை திறப்பு உள்ளிட்டவைகளுக்கு கண் திருஷ்டிக்காக பூசணிக்காய் உடைக்கப்படும். இதையடுத்து, விவசாயிகள் சிலர் தங்களது தோட்டங்களில் விளைந்த பூசணிக்காய்களை ஆயுத பூஜையையொட்டி சைக்கிளில் விற்பனைக்காக கொண்டு சென்றனர்.
பொரி லிட்டர் ரூ.10
வியாபாரி சரவணன்:- ஆயுதப்பூஜையையொட்டி தேங்காய் விலை டன்னுக்கு ரூ.6 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. அளவுக்கு தகுந்தாற்போல் தேங்காய் விலை விற்கப்படுகிறது. பொரி, பொட்டுக்கடலை, அவல், நிலக்கடலை ஆகியவற்றின் விலையில் பெரிய ஏற்றம் இல்லை. சராசரியாக தான் விற்கப்படுகிறது. பொதுவாக 1 லிட்டர் பொரி ரூ.10-க்கும், அவல், பொட்டுக்கடலை, வெல்லம் கலந்த செட் பாக்கெட்டுகள் ரூ.50 முதல் விற்கப்படுகிறது. சூடம், பத்தி, சாம்பிராணி, சந்தனம், குங்குமம் ஆகிய பொருட்களில் விலையேற்றம் எதுவும் இல்லை. சராசரியாக தான் இருக்கிறது. கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் வியாபாரம் உள்ளது.
பூக்கள், பழம் விலை உயர்வு
பூ வியாபாரி வசந்தி:- ஆயுத பூஜையினாலே 2 நாட்கள் பூக்கள் விலை கடுமையாக உயா்ந்து விடும். மல்லிகை பூ கிலோ ரூ.1,000, ரூ.1,200, ரூ.1,500 வரை விற்றது. சம்பங்கி, அரளி, செவ்வந்தி பூக்களின் விலை உயர்வு தான். இந்த விலையை அடிப்படையாக கொண்டு தான் சில்லறை விலைகளில் நாங்கள் விற்பனை செய்கிறோம். கதம்பம் ஒரு முழம் பூ ரூ.60-க்கு விற்கப்படுகிறது.
கலாநிதி:- வழக்கம் போல் இந்த ஆண்டும் ஆயுத பூஜையை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடுகின்றனர். அதற்கேற்ப பூஜை பொருட்களை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். பொருட்களில் பூக்கள் விலை தான் கடுமையாக உயர்ந்துள்ளது. இதேபோல் வாழைப்பழம் மற்றும் பழ வகைகளில் விலை அதிகரித்து காணப்படுகிறது. மற்ற பொருட்களின் விலை பரவாயில்லை.
கட்டிட தொழிலாளி மலைக்கண்ணு:- வீட்டில் பூஜைக்கு தேவையானதில் மொத்தமாக கடை வீதியில் வாங்க முடிந்தது. பொருட்களில் பூக்கள், வாழைப்பழத்தின் விலை தான் அதிகமாக உயா்ந்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சற்று விலை உயர்வு தான். குறிப்பிட்ட தொகைக்குள் தேவையானதை நான் மொத்தமாக வாங்கி விட்டேன். எதிர்பார்த்த பட்ஜெட்டை விட சற்று அதிகம் தான்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.