< Back
மாநில செய்திகள்
அட்சய திருதியையொட்டி நகைக்கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்
மாநில செய்திகள்

அட்சய திருதியையொட்டி நகைக்கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

தினத்தந்தி
|
23 April 2023 4:40 AM IST

அட்சய திருதியையொட்டி தமிழக நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கடந்த ஆண்டை விட 25 சதவீத நகைகள் கூடுதலாக விற்கப்பட்டதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

அட்சய திருதியை

சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பின் வரும் வளர்பிறை திருதியையே, அட்சய திருதியை என்று அழைக்கப்படுகிறது. அட்சயம் என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள். எல்லா நலன்களையும் குறைவில்லாது அள்ளிக்கொடுக்கும் இந்த திருதியை நாளன்று, வாங்கும் பொருள் அளவு இல்லாமல் சேரும் என்பது நம்பிக்கை.

அதனாலேயே அட்சய திருதியை நாளன்று தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள், வீடு மனைகள், வாகனங்கள் உள்ளிட்டவற்றை மக்கள் வாங்குவது வழக்கம்.

அட்சய திருதியை தினத்தன்று புதிதாக வாங்கிய பொருளை பூஜையில் வைத்து வழிபடுவது விசேஷத்துக்குரிய ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. அட்சய திருதியையில் விலை உயர்ந்த பொருளைத்தான் வாங்க வேண்டும் என்பதல்ல. இருந்தாலும் தங்கத்தை நகையாகவோ, காசுகளாகவோ வாங்குவதே பெரும்பாலான மக்களின் விருப்பமாக இருக்கிறது.

நகைக்கடைகளில் மக்கள் கூட்டம்

இந்த ஆண்டுக்கான அட்சய திருதியை நேற்று கொண்டாடப்பட்டது. நேற்று காலை 7.49 மணிக்கு அட்சய திருதியை தொடங்கியது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.47 மணி வரை நீடிக்கிறது.

இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள நகைக்கடைகளில் நேற்று கூட்டம் மிகுதியாகவே காணப்பட்டது. அதிகாலை 5 மணியில் இருந்தே நகைக்கடைகள் திறக்கப்பட்டன. மக்களும் ஆர்வமுடன் வந்து நகைகளை வாங்கி சென்றனர். அதேவேளை நேற்று காலை 7.49 மணி முதல் பகல் 12.20 மணி வரை தங்கம் வாங்குவதற்கு முகூர்த்த நேரம் என்றும் கணிக்கப்பட்டு இருந்தது. இதனால் குறிப்பிட்ட அந்த நேரத்தில் நகைகள் வாங்க பெரும்பாலானோர் முன்பதிவு செய்திருந்தனர்.

அட்சய திருதியை நகைகள் முன்பதிவும் மிகுதியாகவே இருந்தது. இதனால் நகைக்கடைகளில் திருவிழா கூட்டத்தையே பார்க்க முடிந்தது.

களைகட்டிய விற்பனை

சென்னையில் உள்ள 5 ஆயிரம் நகைக்கடைகள் உள்பட தமிழகம் முழுவதும் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய அளவிலான நகைக்கடைகளில் நல்ல விற்பனை நடந்தது. சென்னையில் அதிகாலை முதலே நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதியது.

அந்த வகையில் லலிதா ஜூவல்லரி, ஜி.ஆர்.டி. ஜூவல்லர்ஸ், பிரின்ஸ் ஜூவல்லரி, சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் ஜூவல்லரி, போத்தீஸ் ஸ்வர்ண மகால், மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ், ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜூவல்லர்ஸ், தனிஷ்க் ஜூவல்லரி போன்ற முன்னணி நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

மக்கள் தங்களுக்கு பிடித்தமான நகைகளை தேர்வு செய்து ஆர்வமுடன் வாங்கி சென்றனர். வாடிக்கையாளர்களை கவர பல்வேறு சலுகைகளும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

சிறிய நகைக்கடைகளில் வெள்ளி பாத்திரங்கள், கொலுசு மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை அமோகமாக இருந்தது.

25 சதவீதம் கூடுதல் விற்பனை

இதுகுறித்து சென்னை தங்கம்-வெள்ளி நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஜலானி கூறியதாவது:-

கொரோனா பேரிடர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த 3 ஆண்டுகளாக அட்சய திருதியை நகை வியாபாரம் என்பது பெரிய அளவில் பேசப்படவும் இல்லை. வியாபாரமும் சிறப்பாக இல்லை. ஆனால் இந்த ஆண்டு அட்சய திருதியை மக்களுக்கு புதிய ஊக்கத்தை கொடுத்திருக்கிறது. நகை விற்பனையும் புதிய உச்சத்தை தொடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் நேற்று அதிகாலை முதலே நகைகள் வாங்குவதில் மக்களின் ஆர்வத்தை பார்க்க முடிந்தது. இரவு வரை விற்பனை களைகட்டியது. இன்றும் அதிகாலை முதலே கடைகள் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

முந்தைய ஆண்டின் அட்சய திருதியை விற்பனையை காட்டிலும் 25 சதவீதம் நகைகள் விற்பனை கூடுதலாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றுதான் மொத்த விற்பனையை கணக்கிட முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.480 விலை குறைவு

தமிழகத்தில் கடந்த ஆண்டு அட்சய திருதியை தினத்தன்று 18 டன் அளவில், அதாவது ரூ.9 ஆயிரம் கோடிக்கு தங்க நகைகள் விற்பனை நடந்தது. தற்போது 25 சதவீதம் நகைகள் விற்பனை கூடுதலாக இருக்கும் என்பதால், இந்த ஆண்டு அட்சய திருதியை நகை விற்பனை ரூ.10 ஆயிரம் கோடியை தாண்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.5,665-க்கும், பவுன் ரூ.45,320-க்கும் தங்கம் விற்பனை ஆனது. இந்த நிலையில் கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.5,605-க்கும், பவுனுக்கு ரூ.480 குறைந்து ரூ.44,840-க்கும் தங்கம் நேற்று விற்பனையானது.

தங்கம் விலை கணிசமாக குறைந்தது பொதுமக்களுக்கு இன்னும் ஊக்கத்தை ஏற்படுத்தியதாகவே வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள்.

மேலும் செய்திகள்