< Back
மாநில செய்திகள்
ஆடி அமாவாசையையொட்டிகன்னியாகுமரியில் குவிந்த பக்தர்கள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

ஆடி அமாவாசையையொட்டிகன்னியாகுமரியில் குவிந்த பக்தர்கள்

தினத்தந்தி
|
17 Aug 2023 12:15 AM IST

ஆடி அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ஏராளமானோர் திரண்டு முன்னோர்களுக்கு பலி தர்ப்பணம் கொடுத்தனர்.

ஆடி அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ஏராளமானோர் திரண்டு முன்னோர்களுக்கு பலி தர்ப்பணம் கொடுத்தனர்.

ஆடி அமாவாசை

இந்துக்களின் முக்கிய தினங்களில் ஆடி அமாவாசையும் ஒன்று. இந்த நாளில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கடல், ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் திரண்டு முன்னோர்களுக்கு பலி தர்ப்பணம் கொடுப்பார்கள். இந்த ஆண்டு ஆடி அமாவாசை 2 நாட்கள் வந்தது. அதாவது கடந்த மாதம் 17-ந் தேதி மற்றும் நேற்று என 2 நாட்கள் ஆடி அமாவாசை கடைபிடிக்கப்பட்டது.

கன்னியாகுமரி கடற்கரையில் நேற்று அதிகாலை 2 மணி முதலே ஏராளமானோர் குவியத் தொடங்கினர். அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடலில் புனித நீராடினர். பின்னர் கடற்கரையில் அமர்ந்து இருந்த புரோகிதர்கள் மற்றும் வேதமந்திரம் ஓதுபவர்களிடம் தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்தனர்.

அவ்வாறு பூஜை செய்த பச்சரிசி, எள்ளு, பூக்கள் மற்றும் தர்ப்பை புல் போன்றவற்றை ஒரு வாழை இலையில் வைத்து தலையில் சுமந்து சென்று கடலில் போட்டு விட்டு மீண்டும் நீராடி முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தனர்.

போலீஸ் பாதுகாப்பு

பின்பு கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவில், பகவதி அம்மன் கோவில், சன்னதி தெருவில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் போன்ற கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் கடற்கரை, கடை வீதிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் காணப்பட்டது. இதனால் அனைத்து இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பகவதி அம்மன் கோவில்

ஆடி அமாவாசையை யொட்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு கோவில் மூலஸ்தான நடை மட்டும் திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், நிர்மால்ய பூஜை போன்றவை நடந்தது. தொடர்ந்து 4.30 மணிக்கு வடக்கு பிரதான நுழைவு வாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இரவு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. நள்ளிரவு அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சியும், வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

சிறப்பு பஸ்கள்

ஆடி அமாவாசையை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாகர்கோவில், வள்ளியூர் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து கன்னியாகுமரிக்கு சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் கன்னியாகுமரி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சுகாதார வசதிகள் செய்யப்பட்டு இருந்தன.

குழித்துறை

இதுபோல் குழித்துறை தாமிரபரணி ஆற்றங்கரையில் பலி தர்ப்பணம் கொடுக்க ஏராளமானோர் திரண்டனர். அவர்களின் வசதிக்காக குழித்துறை நகராட்சி மற்றும் குழித்துறை மகாதேவர் கோவில் சார்பில் ஆற்றங்கரையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மேலும் பலி தர்ப்பண பூஜைகள் செய்ய ஆற்றங்கரையில் பல புரோகிதர்கள் அமர்ந்திருந்தனர். பொதுமக்கள் புரோகிதர்கள் முன்பு அமர்ந்து பூஜைகள் செய்து, வாழை இலையில் வைத்திருந்த பொருட்களை பெற்றுக்கொண்டு தலையில் சுமந்தவாறு ஆற்றில் இறங்கி அவற்றை தண்ணீரில் விட்டு புனித நீராடினர்.

இந்த பலி தர்ப்பண நிகழ்ச்சியில் குழித்துறை, மார்த்தாண்டம் பகுதியில் இருந்து மட்டுமின்றி கேரள மாநில எல்லை பகுதியை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்