< Back
மாநில செய்திகள்
தேனி அருகே மூலவைகை ஆற்றில்தரைமட்ட உறைகிணற்றால் விபத்து அபாயம்
தேனி
மாநில செய்திகள்

தேனி அருகே மூலவைகை ஆற்றில்தரைமட்ட உறைகிணற்றால் விபத்து அபாயம்

தினத்தந்தி
|
31 July 2023 12:15 AM IST

தேனி அருகே மூலவைகை ஆற்றில் தரைமட்ட உறை கிணற்றால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

வருசநாடு அருகே வெள்ளிமலை பகுதியில் மூலவைகை ஆறு உற்பத்தியாகிறது. இந்த ஆறு வருசநாடு, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு, கண்டமனூர், கோபாலபுரம், சங்ககோணாம்பட்டி, அம்மச்சியாபுரம், குன்னூர் வழியாக வைகை அணையில் சேருகிறது. இந்த ஆற்றில் ஏராளமான இடங்களில் குடிநீர் திட்டங்களுக்காக உறை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் சில உறை கிணறுகள் பராமரிப்பு இன்றியும், சேதமடைந்தும் காணப்படுகின்றன.

அந்த வகையில் தேனி அருகே கோபாலபுரம் மூலவைகை ஆற்றில் தடுப்பணை அருகில், ஆற்றின் நடுவில் குடிநீர் திட்டத்துக்காக உறை கிணறு அமைக்கப்பட்டது. முறையான பராமரிப்பு இன்றி இந்த உறை கிணறு காட்சிப் பொருளாக உள்ளது. மேலும் இந்த உறைகிணறு தரைமட்ட அளவில் இருப்பதோடு, ஆட்கள் அதற்குள் தடுமாறி விழும் அளவுக்கு இடைவெளி காணப்படுகிறது.

தற்போது நீர்வரத்து இன்றி ஆறு வறண்டு கிடக்கிறது. உறைகிணறு அமைந்துள்ள பகுதி வழியாகத்தான் விவசாய நிலங்களுக்கு கால்நடைகள் அழைத்துச் செல்லப்படுகின்றன. விவசாயிகள், விவசாய தொழிலாளர்களும் இந்த வழியாக தான் தோட்டங்களுக்கு சென்று வருகின்றனர். ஆற்றில் தண்ணீர் வரத்து ஏற்படும் காலங்களிலும் இந்த வழியாகத்தான் விவசாயிகள் தண்ணீருக்குள் இறங்கி ஆற்றை கடந்து செல்வது வழக்கம். ஆபத்தான நிலையில் உள்ள இந்த ஒரு கிணற்றுக்குள் மனிதர்கள் மற்றும் கால்நடைகள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே இந்த உறைகிணற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதோடு அதை சுற்றி உயரமான சுவர் எழுப்பவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
மேலும் செய்திகள்