< Back
மாநில செய்திகள்
மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் கிராம மக்கள் மறியல்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் கிராம மக்கள் மறியல்

தினத்தந்தி
|
6 Jun 2023 12:30 AM IST

கொடைரோடு அருகே ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

காத்திருப்பு போராட்டம்

கொடைரோடு அருகே ஜம்புதுரைக்கோட்டை ஊராட்சி ஊத்துப்பட்டியில் கருப்பணசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. இதில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அகற்றக்கோரி ஒரு தரப்பினரும், எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினரும் இடையே பிரச்சினை இருந்து வருகிறது.

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மாவட்ட கலெக்டர், நிலக்கோட்டை தாசில்தார், ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க ஒரு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை ஆக்கிரமிப்புகளை அகற்றாததால், ஒரு தரப்பினர் கோவில் அருகில் திரண்டு வந்து காத்திருப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர்.

சாலை மறியல்

இதையறிந்த நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சேக் அப்துல்லா, கருப்பையா, வருவாய் ஆய்வாளர் பிரேமலதா, கிராம நிர்வாக அதிகாரிகள் கணேசன், சுகன்யா ஆகியோர் ஊத்துப்பட்டிக்கு நேரில் சென்று இருதரப்பினர்களிடம் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்,

அதன் பிறகு இருதரப்பினரும் கலைந்து சென்றனர். அதன்பின்னர் நேற்று மதியம் திடீரென்று ஒரு தரப்பை சேர்ந்த ஏராளமானவர்கள் திரண்டு வந்து மதுரை -திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் ஊத்துப்பட்டி பிரிவில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆக்கிரமிப்பை அகற்றும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

அதனைத்தொடர்ந்து நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இதனைத்தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்