தேனி
மதுரை-போடி ரெயில் பாதையில்மின்மயமாக்கல் பணிகள் குறித்துஅதிகாரிகள் ஆய்வு
|மதுரை-போடி ரெயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
மின்மயமாக்கல் பணிகள்
மதுரை-போடி இடையே மீட்டர்கேஜ் ரெயில் பாதை, அகல ரெயில்பாதையாக மாற்றப்பட்டது. இந்த ரெயில் பாதையில் மதுரை-தேனி இடையே பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. போடி வரை இந்த ரெயிலை நீட்டிக்க நிர்வாக அனுமதி பெறப்பட்ட போதிலும் இன்னும் நீட்டிக்கப்படாமல் உள்ளது.
இதற்கிடையே மதுரை-போடி அகல ரெயில்பாதையை மின்மயமாக்க ரெயில்வே துறை முடிவு செய்தது. இந்த மின்மயமாக்கல் பணிக்காக ரூ.98 கோடியே 33 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 91 கிலோமீட்டர் தூரம் மின்மயமாக்கல் பணிகள் நடக்க உள்ளன. இதற்கான முதற்கட்ட பணிகள் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி நடந்து வருகிறது.
அதிகாரிகள் ஆய்வு
தற்போது மதுரை-உசிலம்பட்டி வரை பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இந்த மின்மயமாக்கல் பணிகள் தொடர்பாக, 'டவர் வேகான்' எனப்படும் ஆய்வு ரெயில் என்ஜினில் ரெயில்வே மின்மயமாக்கல் பிரிவு அதிகாரிகள் நேற்று ரெயில் பாதையில் ஆய்வு செய்தனர். துணை தலைமை பொறியாளர் ரோகன் தலைமையிலான அதிகாரிகள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.
இதற்காக அவர்கள் ரெயில் என்ஜினில் மதுரையில் இருந்து புறப்பட்டு தேனி வந்தனர். பின்னர் தேனியில் இருந்து போடி வரை சென்று ஆய்வு செய்தனர். ரெயில்வே பாதை பகுதியில் மின்மயமாக்கல் பணிக்காக கம்பங்கள் அமைக்க வேண்டும் என்பதால் ஏதேனும் மின்வயர்கள் கடந்து செல்கிறதா? உயர் மின்அழுத்த கம்பிகள், தொழிற்சாலைகள், நிறுவனங்களுக்கான மின்இணைப்பு கம்பிகள் கடந்து செல்கிறதா? அவ்வாறு ரெயில் பாதையை கடக்கும் உயர்அழுத்த கம்பிகளில் ஏதேனும் அதிர்வுகள் ஏற்படுகிறதா? என்பது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர் ஆய்வை முடித்துக் கொண்டு ரெயில் என்ஜினில் மதுரைக்கு புறப்பட்டுச் சென்றனர். இந்த மின்மயமாக்கல் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் என்று ரெயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.