ஆருத்ரா, ஹிஜாவு மோசடி வரிசையில் சென்னையில் மேலும் ஒரு நூதன மோசடி அரங்கேற்றம்
|ஆருத்ரா, ஹிஜாவு நிதி நிறுவன மோசடி வரிசையில் சென்னையில் மேலும் ஒரு நூதன மோசடி அரங்கேறி உள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
கவர்ச்சிகர அறிவிப்பு
மக்கள் முதலீடு செய்யும் பணத்துக்கு அதிக வட்டி பணம் தருவதாக கூறி ஆருத்ரா, ஹிஜாவு போன்ற நிதி நிறுவனங்கள் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டது. இந்த மோசடி குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த நிதி நிறுவனங்களை சேர்ந்த பலரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகிறார்கள். மக்களிடம் மோசடி செய்யப்பட்ட பணம் மூலம் வாங்கி குவிக்கப்பட்டுள்ள சொத்துகளை முடக்கும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த மோசடி பரபரப்பு அடங்குவதற்குள் சென்னையில் மேலும் ஒரு நூதன மோசடி சம்பவம் அரங்கேறி உள்ளது. சென்னை அரும்பாக்கம் பகுதியில் 'மோகா எக்ஸ்போர்ட்ஸ்' என்ற பெயரில் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வந்த தம்பதியர் இந்த மோசடியை அரங்கேற்றி உள்ளனர். இந்த தம்பதியர் தங்கள் நிறுவனத்தில் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை ஒரு முறை முதலீடு செய்தால் போதும் மாதந்தோறும் வீடுத்தேடி மளிகை பொருட்கள் மொத்தமாக வரும். அதனை பிரித்து 'பேக்கிங்' செய்து வழங்கினால் மாதம் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை கமிஷன் தொகையாக வழங்கப்படும். ஓராண்டு முடிந்த பின்னர் முதலீடு பணமும் திரும்ப வழங்கப்படும் என்று கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டனர்.
மோசடி தம்பதியர் தலைமறைவு
இதனை நம்பி நடுத்தர குடும்பங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். இந்த நிறுவனத்தை நடத்தி வந்த தம்பதியர் ஒரு சில மாதங்கள் மட்டும் கமிஷன் தொகை வழங்கிவிட்டு மீதமுள்ள பணத்தை சுருட்டி விட்டு தலைமறைவாகி விட்டனர்.
கமிஷன் தொகை கிடைக்காத மக்களிடம் விரைவில் வழங்கப்படும் என்று ஊழியர்கள் மூலம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் அவர்கள் அரும்பாக்கம் வீட்டை ஊழியர்கள் மூலம் நேற்று முன்தினம் இரவு காலி செய்துக்கொண்டிருந்தனர். இதுபற்றி தகவலறிந்து பாதிக்கப்பட்டவர்கள் அங்கு திரண்டனர். ஊழியர்கள் சிலரை பிடித்து அரும்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். தங்களை ஏமாற்றிய மோசடி தம்பதியரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அரும்பாக்கம் போலீஸ் நிலையம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய குற்றப்பிரிவு போலீசார் பேச்சுவார்த்தை
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட 70-க்கும் மேற்பட்ட பெண்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு நேற்று மதியம் திரண்டனர். இதனால் கமிஷனர் அலுவலகம் பரபரப்பு ஆனது. போலீசார் குவிக்கப்பட்டனர். மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள தம்பதியரை உடனடியாக கைது செய்ய வேண்டும். தங்களிடம் ஏமாற்றிய பணத்தை மீட்டு தர வேண்டும் என்றுக்கூறி அவர்கள் முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் ஜான் பிரிட்டோ, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ் ஆகியோர் வந்தனர். முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.
இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக புகார் மனு எழுதி கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர். ஆருத்ரா, ஹிஜாவு நிதி நிறுவன மோசடி வழக்கை விசாரிக்கும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இந்த நூதன மோசடி சம்பவம் குறித்து விரைவில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.