< Back
மாநில செய்திகள்
புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஈரோடு
மாநில செய்திகள்

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

தினத்தந்தி
|
15 Oct 2023 12:59 AM GMT

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை

கோபி அருகே மூல வாய்க்கால் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூதேவி கரி வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி கோவிலில் நேற்று காலை 8 மணி அளவில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அப்போது சாமிக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

இதையடுத்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

புளி சாத அலங்காரம்

கோபி அருகே உள்ள குள்ளம்பாளையம் வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. அப்போது 200 கிலோ புளி சாத அலங்காரத்துடன் சயனக்கோணத்தில் பக்தர்களுக்கு சாமி அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர். பின்னர் சாமிக்கு சாற்றப்பட்ட புளி சாதம் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும் கோபி அருகே கூகலூரில் உள்ள சிவ பக்த ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமையான நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக ஆஞ்சநேயருக்கு பால், தயிர், எலுமிச்சை பழம் சாறு, விபூதி, சந்தனம், குங்குமம் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து ஆஞ்சநேயருக்கு மலர் மாலை, வெற்றிலை மாலை, வடை மாலை சாற்றப்பட்டது.

இதேபோல் பாரியூர் ஆதிநாராயண பெருமாள் கோவில், கோபி வரதராஜ பெருமாள் கோவில், மொடச்சூர் வரதராஜ பெருமாள் கோவில், கொளப்பலூர் பெருமாள் கோவில், அளுக்குளி பெருமாள் கோவில், நல்ல கவுண்டன்பாளையம் பெருமாள் கோவில் உள்பட பல்வேறு பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

சிவகிரி

சிவகிரி அருகே விளக்கேத்தி ஓலப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற மாயவர் கோவில் உள்ளது. புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி நேற்று காலை 6 மணிக்கு மாயவருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்து நின்று சாமியை தரிசனம் செய்தனர்.

இதைத்தொடர்ந்து காலை 7 மணி முதல் இரவு வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அந்தியூர்

அந்தியூர் தேர் வீதியில் உள்ள பேட்டை பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடந்தது. இதைத்தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவியுடன் சீனிவாச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.

அந்தியூர் பஸ் நிலையம் அருகே சிவசக்தி நகரில் உள்ள கோட்டை அழகுராஜா பெருமாள் கோவில் நடை நேற்று அதிகாலை 5 மணி அளவில் திறக்கப்பட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் சாமி அருள்பாலித்தார்.

இதேபோல் தவுட்டுப்பாளையம் சீனிவாச பெருமாள் கோவில், கெட்டிசமுத்திரம் பெருமாள் கோவில், பருவாச்சி மலையில் உள்ள கரியவரதராஜ பெருமாள் கோவில் உள்பட பல்வேறு பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நீண்ட வரிசையில் காத்து நின்று சாமியை தரிசனம் செய்தனர்.

சென்னிமலை

சென்னிமலை அருகே மேலப்பாளையத்தில் உள்ள ஆதிநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி அலமேலு மங்கை, நாச்சியார் அம்மை சமேத ஆதிநாராயண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து மேலப்பாளையம் வீதியில் சாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

டி.என்.பாளையம்

கள்ளிப்பட்டி அருகே உள்ள பெருமுகை கிராமம் சஞ்சீவிராய பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையைெயாட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதில் 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்து நின்று சாமியை வழிபட்டனர்.

இதேபோல் கொண்டையம்பாளையம் பகுதியில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவிலிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி 2 கோவில்களிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அம்மாபேட்டை

அம்மாபேட்டை அருகே தொப்பபாளையத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாள் கோவிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையான நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் சாமி அருள்பாலித்தார்.

இதில் அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.

பெருந்துறை

பெருந்துறை கோட்டை பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவிலில் திருவீதி உலா நடந்தது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் பூதேவி- சீதேவியுடன் சமேத பிரசன்ன வெங்கட்ரமண சாமி எழுந்தருளினார். பெருந்துறை நகரின் முக்கிய வீதிகள் வழியாக உலா சென்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்து வந்தனர்.

மேலும் செய்திகள்