நீலகிரி
கோத்தகிரி - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் சாலையை மறித்து நின்ற காட்டு யானை!
|கோத்தகிரியிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் இரவு நேரத்தில், சாலையின் குறுக்கே ஆண் காட்டுயானை ஒன்று நின்றுக் கொண்டிருந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோத்தகிரி
கோத்தகிரியிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் இரவு நேரத்தில், சாலையின் குறுக்கே ஆண் காட்டுயானை ஒன்று நின்றுக் கொண்டிருந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பலாப்பழ சீசன் தொடக்கம்
கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பலா மரங்கள் பயிரிடப்பட்டுள்ளன. கோடை சீசன் தொடங்கிய நிலையில் இந்த பலா மரங்களில் தற்போது சீசன் காரணமாக பலாப்பழங்கள் காய்க்கத் தொடங்கி உள்ளன. சீசன் சமயத்தில் காய்த்து குலுங்கும் பழங்களை உண்பதற்காக சமவெளிப் பகுதிகளில் இருந்து ஆண்டு தோறும் காட்டு யானைகள் இப்பகுதிக்கு வந்து முகாமிட்டு சீசன் முடிந்தவுடன் திரும்பிச் செல்வது வழக்கம். இந்தநிலையில் கடந்த மாதம் முதல் சீசன் காரணமாக பலா மரங்களில் பலாக் காய்கள் காய்த்து குலுங்கத் தொடங்கி உள்ளன.
பழங்களை உண்பதற்காக சமவெளிப் பகுதிகளில் இருந்து வந்துள்ள யானைகள் இங்குள்ள தேயிலைத் தோட்டங்களில் முகாமிட்டுள்ளதுடன், சாலையோரங்களில் உள்ள பலா மரங்களில் உள்ள பலாப் பிஞ்சுகளை உண்பதற்காக கோத்தகிரியிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் அடிக்கடி உலா வருகின்றன.
சாலையில் நின்ற காட்டு யானை
இந்தநிலையில் நேற்று முன் தினம் இரவு 10 மணியளவில் கோத்தகிரியிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் தட்டப்பள்ளம் அருகே ஆண் காட்டு யானை ஒன்று சாலையின் குறுக்கே நின்றுக் கொண்டிருந்தது. யானையை கண்ட வாகன ஓட்டிகள் சற்று தொலைவிலேயே தங்களது வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தினர். இதன் காரணமாக சாலையின் இரு புறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
சுமார் அரை மணி நேரம் சாலையில் நின்று கொண்டிருந்த காட்டு யானை சாலையோரம் இருந்த செடிகொடிகளை தின்றுக் கொண்டிருந்தது. பின்னர் அந்த யானை அருகிலுள்ள வனப்பகுதிக்குள் சென்றது.
போக்குவரத்து பாதிப்பு
யானை அங்கிருந்து சென்ற பின்னரே அந்த சாலையில் போக்குவரத்து சீரானது. யானை சாலையில் நின்றதால் அந்த சாலையில் சுமார் ¾ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், ஒவ்வொரு ஆண்டும் பலாப்பழ சீசன் காலத்தில் காட்டுயானைகள் தேயிலை தோட்டங்களில் முகாமிடுவதுடன், சாலைகளில் செல்லும் வாகனங்களையும் தாக்கி சேதப்படுத்தி வருகின்றன. எனவே காட்டுயானைகள் சாலைக்கு வராமல் தடுக்கும் வகையில் அகழி அமைக்கவோ அல்லது இரும்பாலான தடுப்புகள் அமைக்கவோ வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.