< Back
மாநில செய்திகள்
போடிமெட்டு மலைப்பாதையில்வேன் கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒருவர் சாவு:பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு
தேனி
மாநில செய்திகள்

போடிமெட்டு மலைப்பாதையில்வேன் கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒருவர் சாவு:பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு

தினத்தந்தி
|
23 April 2023 6:45 PM GMT

போடிமெட்டு மலைப்பாதையில் வேன் கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒருவர் பரிதாபமாக இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.

வேன் கவிழ்ந்து விபத்து

நெல்லை கே.டி.சி. நகரை சோ்ந்த ஒரு பெண்ணுக்கும், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள லட்சுமி எஸ்டேட் பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் நேற்று திருமணம் நடைபெற இருந்தது. இந்த திருமணத்திற்காக பெண் வீட்டை சேர்ந்த 21 பேர், ஒரு வேனில் லட்சுமி எஸ்டேட் பகுதிக்கு நேற்று முன்தினம் புறப்பட்டனர். வேனை, நெல்லையை சேர்ந்த கணேசன் (வயது 29) என்பவர் ஓட்டினார்.

கொச்சி-மதுரை நெடுஞ்சாலையில் தேனி மாவட்டம் போடிமெட்டு மலைப்பாதையில் நேற்று முன்தினம் இரவு வேன் சென்று கொண்டிருந்தது. மூணாறு அருகே தொண்டிமலை என்ற இடத்தில் சாலையில் வளைவில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடியது. அப்போது சாலையோரம் இருந்த 200 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது.

5 ஆக உயர்வு

இந்த விபத்தில் வேனில் வந்த பெருமாள் (59), வள்ளியம்மாள் (70), சுசீந்திரன் (8), சுதா (20) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயமடைந்த 17 பேரையும் ராஜாக்காடு போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ராஜாக்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அடிமாலி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜானகி (55) என்பவர் நேற்று பரிதாபமாக இறந்தார். இதனால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.

16 பேருக்கு சிகிச்சை

இதற்கிடையே நெல்லை வல்லவவன்கோட்டையை சேர்ந்த தெய்வானை (55), தூத்துக்குடி கைலாசபுரத்தை சேர்ந்த ஹரிகிருஷணன் (13), மகேஷ்கண்ணன் (40), சுவாதி (16), கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த சீதாலட்சுமி (32), நெல்லை கே.எஸ்.சி நகரை சேர்ந்த அற்புதசெண்பகம் (40), ஸ்ரீபிரகாஷ் (15), தூத்துக்குடி இந்திரநகரை சேர்ந்த இந்திராணி (52), தூத்துக்குடி சொக்கநாதபுரத்தை சேர்ந்த தனிஷ்கா (5), வசந்தி (31), நெல்லை கே.டி.சி நகரை சேர்ந்த செல்வபிரகாஷ் (15), வேன் டிரைவர் கணேசன் (29), கிருஷ்ணமம்மாள் (65), சுசிலேந்திரன் (4), சுடாஒளி (37), சங்கராபுரத்தை சேர்ந்த கண்ணன் (32) ஆகியோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Tags :
மேலும் செய்திகள்